நாடுவாரியான குடியேற்ற விசா எண்ணிக்கை கட்டுப்பாடுகளை நீக்குகிறது அமெரிக்கா
அமெரிக்காவில் பணியாற்ற நாடுவாரியாக விதிக்கப்பட்டிருந்த குடியேற்ற விசா எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகளை (per-country caps on worker-based immigration visas) அந் நாட்டு அரசு நீக்கவுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்போதுள்ள விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்சமாக 7 சதவீதம் வரையே அமெரிக்காவில் பணியாற்ற விசா வழங்கப்பட்டு வந்தது. அதாவது ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் 7 சதவீதத்துக்கும் அதிகமாக அமெரிக்காவில் பணியில் இருக்க தடை இருந்தது. இப்போது இந்த கட்டுப்பாட்டை அமெரிக்கா தளர்த்தவுள்ளது.
மேலும் கிரீன் கார்ட், நிரந்தர குடியுரிமை விசாக்கள் ஆகியவை முதலில் வருவோர்க்கு முதலில் என்ற அடிப்படையில் வழங்கப்படவுள்ளன. இதன்மூலம் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பலன் கிடைக்கவுள்ளது. இந்த இரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் மிக அதிக அளவில் அமெரிக்காவில் பணியாற்ற விசா கோரி விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த குடியரசுக் கட்சியின் எம்பியான ஜேசன் சாவெட்ஸ் கூறுகையில், இந்த விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் மூலம் அமெரிக்காவில் படித்துவிட்டு இங்கேயே பணியாற்ற முன் வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
இதன்மூலம் நமது நாட்டின் கல்வியால் பெற்ற திறமையை அவர்கள் நமக்குப் போட்டியான நாடுகளில் போய் பயன்படுத்தாமல், இங்கேயே பயன்படுத்த வசதி பிறக்கும் என்றார்.
தற்போது அமெரிக்க குடியேற்றத்துறை ஆண்டுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கிரீன் கார்டுகளை, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு அளித்து வருகிறது.
இதேபோல குடும்ப அடிப்படையிலான விசா அளவும் கூட, ஒரு நாட்டுக்கு 7 சதவீதம் என்ற அளவிலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் மற்றும் மெக்சிகோ நாட்டவருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் சார்ல்ஸ் ஷூமர் கூறுகையில், இந்த மசோதாவை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக செனட்டில் நிறைவேற்ற பாடுபடுவோம். இந்த மசோதாவுக்கு செனட்டில் நல்ல ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த மசோதா மூலம், அமெரிக்காவில் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய திறமைசாலிகளைக் கவர முடியும் என்று நம்புகிறேன் என்றார்.
0 comments :
Post a Comment