Saturday, December 3, 2011

சர்ச்சைக்குரிய இளம்பெண் உளவாளிதான் என்று இன்னமும் சந்தேகம்!

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்குள் பணிபுரிந்தபடி ரஷ்யாவுக்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கிய 26 வயதான இளம்பெண் கேட்டியா ஸாடுலிவிடர், பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தில் இருந்து (தற்காலிகமாக?) தப்பித்துக் கொண்டார். அவர் தொடர்ந்தும் பிரிட்டனில் தங்கியிருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றது பிரிட்டிஷ் இமிகிரேஷன் அப்பீல் கோர்ட்.

கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு, பிரிட்டிஷ் ஹோம் மினிஸ்ட்ரியை அதிர வைத்திருக்கின்றது!

ஹோம் மினிஸ்ட்ரியின் பெண் பேச்சாளர், “கோர்ட் தீர்ப்பில், அவர் (கேட்டியா) உளவாளி என்று சந்தேகிக்க காரணங்கள் உள்ளன, ஆனால், எதற்கும் நிரூபணம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. நாம் (ஹோம் மினிஸ்ட்ரி) எடுத்துள்ள நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் கிடையாது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் நாடுகடத்தப்பட வேண்டும் என்பதே இப்போதும் எமது நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து பிரிட்டனில் குடியேறிய கேட்டியா ஸாடுலிவிடர், பிரிட்டிஷ் எம்.பி. மைக் ஹான்காக்கின் உதவியாளராக பணியில் இணைந்து கொண்டிருந்தார். அவருக்கு அந்த வேலை எப்படிக் கிடைத்தது என்ற சந்தேகமும் பலரால் எழுப்பப்பட்டிருந்தது. மைக் ஹான்காக் எம்.பி., பிரிட்டிஷ் பாதுகாப்பு தேர்வு கமிட்டியில் உறுப்பினராக உள்ளார்.

பாதுகாப்பு தேர்வு கமிட்டியின் கூட்டங்களில் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல விஷயங்கள் ஆராயப்படுவது வழக்கம். அந்தக் கூட்டங்களில் எம்.பி.-யின் உதவியாளர் என்ற பெயரில் கேட்டியா கலந்துகொண்டது, பிரிட்டிஷ் உளவு அமைப்புகளை அலர்ட் பண்ணியிருந்தது.

அதையடுத்து அவரது நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கிய உளவுத்துறை, தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கேட்டியாவை ரஷ்ய உளவாளி என்று குற்றம் சாட்டியிருந்தது. அவரை பிரிட்டனில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்றும் ஹோம் மினிஸ்ட்ரிக்கு ரெக்கமென்ட் செய்தது.

ஹோம் மினிஸ்ட்ரி வழங்கிய நாடுகடத்தல் உத்தரவை எதிர்த்து பிரிட்டிஷ் இமிகிரேஷன் அப்பீல் கோர்டுக்கு சென்றிருந்தார் கேட்டியா. சுமார் ஒரு வருடம் நடைபெற்ற வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒருவருட காலத்தில் கேட்டியாவின் கடந்தகாலம் பற்றி பிரிட்டிஷ் ஊடகங்கள் பெரிய ஆராட்சியையே செய்திருந்தன. கேட்டியா உல்லாசப்பயணம் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் பலவும், பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியாகின. (மேலேயுள்ள பீச் போட்டோ, அப்படியாக வெளியான போட்டோக்களில் ஒன்று)

கேட்டியாவை உளவாளி என்று குற்றம் சாட்டுவதற்கு பிரிட்டிஷ் உளவுத்துறை வைத்திருக்கும் ஆதாரங்கள் எவை என்று வெளியிடப்படவில்லை. காரணம், தேசிய பாதுகாப்பு, மற்றும் உளவுத்துறை தொடர்பாக பல விபரங்கள் அவற்றில் உள்ளதால், இந்த விசாரணையின் பெரும்பகுதி, மூடப்பட்ட அறைக்குள் நடைபெற்றிருந்தன.

“பிரிட்டிஷ் பாதுகாப்பு ரகசியங்கள் எவற்றையும் நான் ரஷ்ய உளவுத் துறைக்கு கொடுக்கவில்லை” என்பதே கேட்டியாவின் வாதம். அது கோர்ட்டால் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்பட இல்லை. ஆனால், ரஷ்ய உளவுத் துறைக்கு ரகசியங்களை பாஸ் செய்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்ற கோணத்தில், கேட்டியாவுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.



No comments:

Post a Comment