Friday, December 16, 2011

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு வந்தடைந்தோர் மீது சிஐடி யினர் விசாணை.

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரிய 55 இலங்கையர்கள் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டு இன்று காலை 11.25 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பிரித்தானிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் விசேட விமானம் ஒன்றின் ஊடாக இவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இவ்வாறு பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டுள்ள 55 பேரில் 48 ஆண்களும் 7 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 39 தமிழர்கள், 9 முஸ்லிம்கள் மற்றும் 7 சிங்களவர்கள் அடங்குகின்றனர்.

பதுளை, யாழ்ப்பாணம், களுவாஞ்சிக்குடி, வவுனியா, திருக்கோணமலை, வத்தளை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அகதி அந்தஸ்த்து கோரி பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்தனர்.

இந்நிலையில் மாணவர் விசாவில் இருந்தமை, உரிய ஆவணங்கள் சமர்பிக்காமை உள்ளிட்ட பல விடயங்களைக் கருத்திற் கொண்டு குறித்த 55 பேரும் பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று இலங்கையை வந்தடைந்த இவர்கள் இலங்கை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்றதுடன் பின்னர் அவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்சமயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலும் மாலை 3 மணிக்குப் பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment