Tuesday, December 20, 2011

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கூட்டமைப்பு அவசியம் பங்கேற்க வேண்டும் - ஜனாதிபதி

இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு காண அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசியம் எனவும் அவர்கள் தமது பிரதிநிதிகளின் பெயர்களை வழங்கி அதில் பங்குபற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று (20) அலரி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் இங்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதி சம்பந்தனின் இக்கூற்று எமக்கு மிகவும் கவலையளிக்கிறது.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளிவந்துள்ள போதும் சர்வதேச விசாரணைக்கு சம்பந்தன் வலியுறுத்துகிறார். அறிக்கை தொடர்பில் எம்மோடு கலந்துரையாடாமல் ஏன் நாட்டிற்கு வெளியில் இவ்வாறு கூறுகிறார்?

இதன்மூலம் உள்நாட்டு மீதான வெளி சக்திகளின் அழுத்தமே அதிகரிக்கும்.

என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

இதேநேரம் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் அவசியமானவர்கள் முறையான விதத்தில் கோரிக்கை முன்வைக்கும் பட்சத்தில் அதில் பிரச்சினைகள் எதுவும் இருக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொன்சேகாவின் விடுதலை குறித்து டிரான் அலஸுடன் கடந்த ஒன்றரை, இரண்டு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment