நேட்டோ- அமெரிக்க படையினருக்கு எதிராக கொழும்பு தெவட்டகஹா முஸ்லிம் பள்ளிவாயில் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதுஅமெரிக்காவுக்கு எதிராக உலகநாடுகளிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் அணிதிரள வேண்டும் என மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா இதன்போது அழைப்பு விடுத்தார்.
இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமெரிக்காவுக்கும் நேட்டோ படைகளுக்கும் எதிராக பல்வேறு வாசகங்கள் பொறித்த சுலோகங்களை ஏந்தியிருந்தனர். தெவட்டகஹா பள்ளிவாயிலிலிருந்து லிப்டன் சுற்றுவட்டம் வரை அவர்கள் பேரணியாகவும் சென்றனர்.
மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா அங்கு கருத்து தெரிவிக்கையில்,நேட்டோ படைகள் முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக தொடர்ந்தும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. லிபியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், ஈரானுக்கு எதிரான தாக்குதல் என அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன.
தற்போது பாகிஸ்தானில் தமது அராஜக நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. அதன் விளைவாக 28 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் அண்மையில் கொல்லப்பட்டார்கள். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நேட்டோ படைகள் முன்னெடுத்துவரும் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும். அப்போதே இவ்வாறான அராஜக செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது.
No comments:
Post a Comment