Monday, December 26, 2011

தலைவர் தலையில் சுடப்பட்டது, ராணுவ முற்றுகையை உடைத்த பின்னரே!

அரசுக்கு எதிராகப் போராடும் போராளி இயக்கத்தின் பிரதான தலைவரை யுத்த முனையில் கொன்று விட்டதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது சுடான் ராணுவம். குறிப்பிட்ட ஆயுதக் குழுவின் செயற்பாடுகள் யாவும் புலிகளின் செயற்பாடுகளை ஒத்ததாக இருந்து வந்துள்ளதுடன், அதன் தலைமைக்கும் புலித்தலைமைக்கு நேர்ந்த கதியே கிட்டியுள்ளது.

யுத்தம் நடந்துகொண்டிருந்த இடத்தில் இயக்கத்தின் தலைவர் இருப்பதைத் தெரிந்துகொண்டு அந்த இடத்தைச் சுற்றி வளைத்து தாக்கியதாக கூறுகிறது ராணுவம். “முற்றுகைக்குள் சிக்கிய அனைவரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களில் இயக்கத்தில் தலைவரின் உடலும் அடையாளம் காணப்பட்டுள்ளது” எனவும் அறிவித்துள்ளது.


தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் தலைவர் கலீல் இப்ராஹிம்

கொல்லப்பட்ட தலைவரின் பெயர் கலீல் இப்ராஹிம். ஜெம் (JEM – Justice and Equality Movement) என்ற விடுதலை இயக்கத்தின் தலைவர் இவர். வடக்கு கோர்டோபான் மாநிலத்தில், ராணுவத்துக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது இந்த விடுதலை இயக்கம்.

2003-ம் ஆண்டில் இருந்து ஆயுதப் போராட்டத்தில் தீவிரமான ஈடுபட்டுள்ள ஜெம், ராணுவ ரீதியாக பலமான அமைப்பாக கருதப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த இயக்கம் ராணுவ ரீதியாக வெற்றிகளையும் பெற்றது. அப்போது இவர்கள் தலைநகர் கார்ட்டூமை கைப்பற்றலாம் என்ற நிலையும் இருந்தது.

அதன்பின் ராணுவத்தின் கை ஓங்கத் தொடங்கியது.

சூடானில் ஒன்றுக்கு மேற்பட்ட விடுதலை இயக்கங்கள் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரின் அரசு, இந்த விடுதலை இயக்கங்களை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்து, பேச்சுக்களும் கார்ட்டூம் நகரில் நடைபெற்றன. அந்தப் பேச்சுக்களில் தமது இயக்கம் கலந்து கொள்ளாது என அறிவித்திருந்தார் ஜெம் இயக்கத்தின் தலைவர் கலீல் இப்ராஹிம்.

மற்றைய இயக்கங்களுடன் தமது இயக்கத்தை சமமாக நடத்தக்கூடாது எனவும், தாமே போராடும் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றும் அறிவித்திருந்தார் அவர். பேச்சுவார்த்தைகளை நடத்துவதென்றால், தமது இயக்கத்துடன் மட்டும் பேச வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. சூடான் அரசு அதற்கு இணங்கவில்லை.

அதையடுத்து இரு தரப்பும் யுத்தத்தில் இறங்கியிருந்தன.

2003-ம் ஆண்டில் இருந்து யுத்தம் நடைபெற்ற நிலையில், 2009-ம் ஆண்டு ஐ.நா.-வின் கணிப்பின்படி யுத்தத்தில் சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 2.7 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். ராணுவம் பொதுமக்களை கொன்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஜெம் இயக்கம் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு வயது குறைந்த ஆட்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்த குற்றச்சாட்டும் உள்ளது. இயக்கத்தில் சேர மறுத்தவர்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.

The Hague நகரில் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், கட்டாய ஆட்சேர்ப்பில் குழந்தைப் போராளிகளை இயக்கத்தில் சேர்த்த குற்றச்சாட்டில் ஜெம் இயக்க தலைவர் கலீல் இப்ராஹிமை கைது செய்ய அரஸ்டு வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், அவர் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பங்கரில் மறைந்திருந்த காரணத்தால் கைது செய்ய முடியவில்லை.

கடந்த மூன்று வாரங்களாக போராளிகளை முழுமையான முற்றுகை ஒன்றுக்குள் கொண்டு வந்திருந்த சூடான் ராணுவம், வெள்ளிக்கிழமை தலைவரின் பங்கர் உள்ள இடத்தையும் சூழ்ந்து கொண்டது. அவரும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் கார்ட்டூம் நகரில் இருந்து 700 கி.மீ. மேற்கேயுள்ள வாட் பண்டா என்ற இடத்தில் ராணுவ முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேற முயற்சிகளை மேற்கொண்டனர்.

ராணுவப் பேச்சாளர் கர்னல் சவர்மி காலெட், “இயக்கத் தலைவரும் மெய்பாதுகாவலர் அடங்கிய சிறிய படையணியும் முற்றுகையை உடைத்துக்கொண்டு தெற்கே தப்பிச் செல்லத் தொடங்கியபோது, நாம் தாக்குதலை கடுமையாக்கினோம். அந்த சிறிய படையணியில் உள்ள அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் இயக்கத் தலைவர் கலீல் இப்ராஹிமின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தமது தலைவர் கொல்லப்பட்ட தகவலை ஜெம் இயக்கம் இன்னமும் ஒப்புக்கொள்ளவில்லை. அநேகமாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

கடந்த காலத்தில் கலீல் இப்ராஹிம் சூடானுக்கு வெளியே லிபியாவில் தங்கியிருந்து இயக்கத்தை நடத்தியிருந்தார். அப்போது கடாபியின் ஆதரவு அவருக்கு இருந்தது. இப்போதும், “யுத்த முனையிலிருந்து தப்பிச் சென்று வேறு ஒரு நாட்டில் மறைந்திருக்கிறார். உரிய நேரத்தில் மீண்டும் வருவார்” என்று ஜெம் அமைப்பு கூறிவிட சான்ஸ் உள்ளது.

சில வருடங்களுக்காவது அந்தக் கூற்றை மெயின்டெயின் பண்ண முடியும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சகல விடயங்களும் புலிகளியக்கத்தை ஒத்ததாக உள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில், தமிழர் எவரும் தமது பிள்ளைகளை பிரபாகரன் தலைமை பலவந்தமாக படையில் சேர்த்தமைக்காக வழக்கு தாக்கல் செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும், ஆனால் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டிருக்காது இருந்திருந்தால் நிச்சயமாக, கட்டாய ஆள்சேர்ப்புக்குக்காக பிரபாகரனுக்கும் அவர் கும்பலுக்கும் எதிராக மக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருப்பர் என்பது நிச்சயம்.

1 comments :

Anonymous ,  December 27, 2011 at 5:09 AM  

சபாஸ் சூடானிலும் ஒரு சூரிய தேவன்.
ஆனால், எங்கட தலைவர் மாதிரி கோடாரியால் கொத்துவாங்கவில்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com