"நேட்டோ மீண்டும் தாக்கினால் பதிலடி கொடுங்கள்': பாக்., ராணுவத்துக்கு கயானி உத்தரவு
நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம் என ஆப்கன் எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவப் படையினருக்கு அந்நாட்டு ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சலாலா எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தும்படி நேட்டோவுக்கு பாக்., அதிகாரிகள் முன் அனுமதி வழங்கிய விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது.
கடந்த நவம்பர் 26ம் தேதி, பாக்., ஆப்கன் எல்லையில் சலாலா எல்லைச் சாவடி மீது நேட்டோ நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சலாலா எல்லைப் பகுதியில் இருந்து முதன் முதலில் ஆப்கன் எல்லைப் பகுதியில் இருந்த அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு முன்பாக, அமெரிக்க, ஆப்கன் மற்றும் பாகிஸ்தானிய அதிகாரிகள் அடங்கிய எல்லைக் கட்டுப்பாட்டு மையத்தை நேட்டோ தொடர்பு கொண்டது. சம்பந்தப்பட்ட இடத்தில், பாக்., ராணுவ வீரர்கள் உள்ளனரா என நேட்டோ அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளித்த பாக்., அதிகாரிகள்,"சலாலா எல்லைப் பகுதியில் பாக்., வீரர்கள் யாரும் இல்லை; தாக்குதல் நடத்தலாம்' எனக் கூறியுள்ளனர். ஆனால், எல்லைச் சாவடியில் பாக்., வீரர்கள் இருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.
இதற்கிடையில், பாக்., ராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,"தாக்குதல் தலிபான்கள் மீதுதான் நடக்கிறது என பாக்., ராணுவம் கருதியது. அதனால், நேட்டோ படைகளுடன் இணைய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில், இருதரப்புக்கான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், நேட்டோவுடன் இணைய முடியவில்லை. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அழிவு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், எல்லைப் பகுதியில் பாக்., தரப்பு மீது மீண்டும் நேட்டோ தாக்குதல் நடத்துமானால், யாரையும் கேட்காமல் நேட்டோ மீது பதில் தாக்குதல் நடத்தும்படி எல்லைப் பகுதி ராணுவ வீரர்களுக்கு ராணுவத் தளபதி கயானி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லைப் பகுதி ராணுவத்தில் உள்ள அடிமட்ட வீரர்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை தணிப்பதற்காகவே கயானி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பாக்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேநேரம், பாக்., பார்லிமென்ட்டில் நேற்று நேட்டோ தாக்குதல் தொடர்பாக கண்டனம் நிறைவேற்றப்பட்டது. தாக்குதலில் இறந்த வீரர் ஒருவரின் குடும்பத்தை, அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
0 comments :
Post a Comment