நீர்கொழும்பு நகரில் நத்தார் பண்டிகை வியாபாரம் களை கட்ட ஆரம்பித்துள்ளது. நகரின் வர்த்தகப் பகுதி அமைந்துள்ள இடங்களில் கிறிஸ்மஸ் மரங்கள்,கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட வாழ்த்து அட்டைகள் ,பரிசுப்பொருட்கள் ,மலர் அலங்காரப்பொருட்கள்,ஆடை வகைகள், வீட்டு பாவனைப்பொருட்கள் விற்பனை செய்யும் தற்காலிக நடைபாதைக் கடைகள் அதிகளவு திறக்கப்பட்டுள்ளன.
சில வியாபார நிலையங்கள் மலிவு விற்பனைகளை ஆரம்பித்துள்ளன. வீதிகளிலும் கடைகளிலும் அதிக எண்ணிக்கையான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது .
இதே வேளை, வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் அலங்கார மின் குமிழ்களினாலும், கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிக்கும் அலங்காரப் பொருட்களினாலும் சோடிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் தங்கியிருக்கும் பகுதிகளிலுள்ள ஹோட்டல்கள், விடுதிகள்,அப்பிரதேசங்களிலுள்ள கடைத்தொகுதிகள் என்பனவும் கிறிஸ்மஸ் மற்றும் புது வருட கொண்டாட்டத்திற்காக அலங்காரங்களை செய்துள்ளதுடன்,சில ஹோட்டல்கள் விசேட நிகழ்ச்சிகளையும் செய்துள்ளன.
இதேவேளை, நகர மத்தியில் வர்த்தகப் பிரதேசத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதிக எண்ணிக்கையான மக்கள் வருகை தருவதை அடுத்து போக்குவரத்து பொலிஸார் அதிக எண்ணிககையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment