கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகத்தினை தடுக்க உத்தரவு.
கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது, சிறுவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் இவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு, தகவல் தொழில்நுட்பக்கல்வி மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கிழக்கு மாகாண சிறுவர்களின் அபிவிருத்தி தொடர்பாக அண்மையில் அக்கரைப்பற்று நன்னடத்தை காரியாலயத்தில் கிழக்கு மாகாண நன்னடத்தை ஆணையாளர் எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே மேற்படி தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை முற்றாக தீர்ப்பதற்கு தன்னால் முடியுமான அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள தயாராக உள்ளதாக செயலாளர் அஸீஸ் கூறினார்.
இக் கூட்டத்தில் நன்னடத்தை திணைக்கள மாகாண ஆணையாளர் எம்.முபாறக் பேசும்போது கிழக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தாட்சிப்படுத்தப்பட்ட சிறுவர் பாடசாலை, அரச பிள்ளைக் காப்பகம், சிறுவர் தடுப்புமுகாம் என்பன மாகாணத்தின் கலாசார விழுமியங்களை அனுசரித்து எதிர்காலத்தில் உருவாக்கப்படும். பிள்ளைகளுக்காக பணிசெய்கின்ற உயர் இலட்சியத்துடன் அனைத்து உத்தியோகத்தர்களும் செயற்படுதல் வேண்டும். இதன் மூலம் இலங்கையின் முன்மாதிரியான திணைக்களமாக கிழக்கு மாகாண நன்னடத்தை திணைக்களம் மாற்றப்படும் என தெரிவித்தார்.
இதன் போது திணைக்களத்தின் நிருவாக உத்தியோகத்தர், நன்னடத்தை காரியாலய பொறுப்பதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment