Sunday, December 18, 2011

'நல்லிணக்கத்திற்கான சர்வமத ஒன்றியத்தின்' ('நெய்பர்') வருடாந்த பொதுச்சபைக் கூட்டம்

'நல்லிணக்கத்தற்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியம்' என்ற சமயத் தலைவர்களின் ஆன்மீக இயக்கத்தின் முதலாவது வருட பொதுச்சபைக் கூட்டம் டிசம்பர் 3ம் 4ம் திகதிகள் பிலியந்தல, வாவெல இல் அமைந்துள்ள சுபோதி கற்கை நிலையத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

தேசிய நல்லிணகத்தினை ஏற்படுத்துவதற்கும் புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குமான எதிர்கால வேலைத்திட்டத்தினை வடிவதைத்தல் என்பது இப் பொதுச்சபை கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.

ஊழல் மோசடிகள் அற்றதும் நீதியானதுமான இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புதில் ஆன்மீகத்தை அடித்தளமாகக் கொள்தல் என்பது இக் கூட்டத்தின் தொனிப் பொருளாகும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வடமத்தி மற்றும் வட மேற்கு மாகாணங்களைச் சேர்ந்த 11 மாவட்டங்களில் இருந்து 106 பிரதிகள் இப் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானவர்கள் நான்கு பிரதான சமயங்களையும் சேர்ந்த சமயத்தலைவர்களாகும் என்பது குறிப்பிட்டத்தக்கது.

மேலும் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் பெண்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையிலும் சிவில் சமூத்தின் மூத்த பிரஜைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் நான்கு சமயங்களையும் சேர்ந்த இளைஞர்களும் பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆறு அமர்வுகளாக நடைபெற்ற இப் பொதுச்சபைக் கூட்டத்தில் அமைப்பின் இடைக்கால உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தலைமை தாங்கினர். பொதுச்சபை கூட்டத்தை நிறைவு செய்த இறுதி அமர்வானது சுபோதி அமைப்பின் தாபகரும் அறிஞருமான வண. பிதா பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்ச்சியின் முதலாவது அமர்வில் நோக்கமும் எதிர்பார்க்கும் பயன் விளைவுகளும் என்ற தலைப்பில் நெய்பர் அமைப்பின் இடைக்கால உறுப்பினர்களில் ஒருவரான வண. வெலியமுவபதான பியரதன தேரர் அவர்களின் தலைமை உரையினைத் தொடர்ந்து , சோபித தேரர் அவர்களும் நளீமியா பல்கலைக்கழகத்தின் துணை இயக்குனர் செய்க் அகார் மொகமட் அவர்களும் உரைகளை நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 'இலங்கையைக் மீளக்கட்டியெழுப்புதல் : சவால்களும் ஆன்மீக பார்வைகளும்'; என்ற தொனுப்பொருளில் நான்கு சமயங்களையும் சேர்ந்த சமயத்தலைவர்கள் தத்தமது சமயங்களின் கண்ணோட்டத்தில் ஆன்மீக ஆய்வினைச் சமர்ப்பித்தனர்.

'உலக மயமாக்கமும் சமூகத்தில் அதன் தாக்கமும்' என்ற தொணிப்பொருளில் வண. பிதா தமிழ் நேசன் அவர்களின் தலைமையில் இரண்டாவது அமர்வு நடைபெற்றது. இதில் 'உலக மயமாக்களின் கேடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், மானுட விழுமியங்களை மீளப்புதுப்பித்துக் கொள்ளவும் ஆன்மீகதைப் பயன்படுத்தல்' என்ற தலைப்பில் கலாநிதி.எச்.டி.ஜி.எம். திலகரத்ன அவர்களின் பிரதான உரை சிங்களம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வாசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நெய்பரின் ஒரு வருடகால களநிலைச் செயற்பாடுகளும் அதன் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் அமைப்பின் இடைக்கால உறுப்பினர்களால் சபையில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இதனைத் அடுத்து 'ஆன்மீகத்தைக் கூர்மைப்படுத்தல் : உபாய மார்க்கங்கள் ' என்ற தொணிப்பொருளின் கீழ் குழுநிலைக் கலந்துரையாடல் நடைபெற்றது. குழுநிலைக் கலந்துரையாடலின் பெறுபேறுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.

பிற்பகலில் நடைபெற்ற இவ் அமர்வு தேசபந்து மனோகர சர்மா குருக்கள் அவர்களினால் தலைமைதாங்கப்பட்டது. இவர் நெய்பர் இடைக்கால குழு உறுப்பினர்களில் ஒருவராகும். கிராமங்களை அணிதிரட்டலுக்கான உபாய மார்க்கங்கள், நீதிமனசாட்சிக் குழுக்களை அமைத்தல், பங்காளர் அமைப்புகளுடனான செயற்பாடுகள் ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் மூன்று குழுக்களாக குழுநிலை ஆய்வு நடைபெற்றது.

“NEIFR: உபாய வழிமுறைகளைத் திடப்படுத்துதல்' எனும் தொணிப்பொருளின் கீழ் மௌலவி மொகமட் மக்கி அவாகளின் தலைமையில் நான்காவது அமர்வு நடைபெற்றது.

பிற்பகல் நெய்பரின் காணொளி காண்பிக்கப்பட்டது. இதில் இவ் அமைப்பின் தோற்றம், வளாச்சி மற்றும் செயற்பாடுகள் விவரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்றைய காலத்தின் முரண்நிலை என்ற தலைப்பில் சமர்ப்பணம் நடைபெற்றது.

இரண்டாம் நாள் எதிர்காலத்திட்டங்கள் என்ற தலைப்பில் குழுநிலைக் கலந்துரையாடல் சகோ. பிரியன்க தீபால் அவர்களின் தலைமையில் நடைபெற்று, ஆறாம் அமர்வு தொகுப்புரை மற்றும் நன்றியுரைகளுடன் பொதுச்சபைக் கூட்டம் நிறைவுற்றது.

கூட்டத்தின் இறுதியில் அடுத்து வரும் ஒரு வருடகாலத்திற்கு தற்போதுள்ள தற்காலிக செயற்குழு முழுமையான செயற்குழுவாகச் செயற்படுவதற்கும் அவசியமான யாப்பு மாற்றங்களைச் செய்வதற்கும் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

யாப்பினைச் செழுமைப்படுத்தும் கருத்துக்கள் இருப்பின் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக நெய்பர் செயற்குழுவிற்குச் சமர்ப்பிப்பது எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு. பி.ப 2 மணியளவில் பொதுச்சபை நிறைவுற்றது.

படம்: - (இலங்கை நெட் செய்தியாளர் ஏ.ஆர்.றஹ்மான்)

No comments:

Post a Comment