Monday, December 12, 2011

ஆஸி.யிலிருந்து இரு தமிழ் அகதிகளை நாடுகடத்த முயற்சி: சக தமிழ் அகதிகள் எதிர்ப்பு ஆர்பாட்டம்

அவுஸ்திரேலியாவில் இருந்து இரு இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படுவதை நிறுத்துமாறு கோரி அவுஸ்திரேலிய பேர்த் விமான நிலையத்தில் உள்ள அகதிகள் முகாம் இலங்கையர்கள் சிலர் இன்று (12) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அகதிகள் முகாமில் இருந்து வெளியே சென்ற காரில் இலங்கையர் ஒருவர் ஏற்றிச் செல்லப்படுவதாகத் தெரிவித்து அக்காரை சுற்றிவளைத்து இலங்கை தமிழ் அகதிகள் இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் அந்தக் காருக்குள் மனநிலை குன்றிய ஒருவரே இருந்ததாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த காரை 12 பேர் அடங்கிய குழுவொன்று மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக அகதிகள் உரிமை செயற்பாட்டு வலையமைப்பின் பேச்சாளர் எலெக்ஸிஸ் வெஸிலி தெரிவித்துள்ளார்.

முகாமில் இருந்து இரு இலங்கையர்கள் இன்று (12) திங்கட்கிழமை அழைத்துச் செல்லப்பட்டு நாளை (13) செவ்வாய்கிழமை பேர்த் விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாகவும் அவ்வாறு அனுப்பினால் அது அவர்களுக்கு ஆபத்து எனவும் எலெக்ஸிஸ் வெஸிலி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்பக்கூடாதெனவும் இலங்கையில் இன்னும் பலர் முகாம்களில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திருப்பி அனுப்பப்பட இருந்த ஒரு இலங்கை தமிழரை திருப்பி அனுப்பக்கூடாதென அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழ் அகதிகள் இன்று பகல் வேளையிலேயே தெரிந்து கொண்டதாக எலெக்ஸிஸ் வெஸிலி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு இலங்கை அகதி ஒருவரை திருப்பி அனுப்பக் கூடாதென நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

இதனை அறியாத அகதிகள் பொறுப்பற்ற வகையில் மனநிலை குன்றிய ஒருவரை ஏற்றிச் சென்ற காரை வழிமறித்து ஆர்பாட்டம் செய்ததாக அந்த குடிவரவு அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com