அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு சீர்குலையத் துவங்கியுள்ளதை அடுத்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், பாகிஸ்தானுடனான தனது உறவை அளவோடு வைத்துக் கொள்ள தீர்மானித்து, அமெரிக்கா செயலில் இறங்கி விட்டது. இந்தாண்டில், அமெரிக்கா, பாக்., இடையிலான உறவுகள் பல்வேறு காரணங்களால் சீர்குலையத் துவங்கின. கடந்த நவம்பர் 26ம் தேதி நிகழ்ந்த நேட்டோ தாக்குதல், சீர்குலைவின் வேகத்தை மேலும் அதிகரித்தது. இந்நிலையில், பாக்., உடனான தனது உறவை, அமெரிக்கா மறு பரிசீலனை செய்யத் துவங்கியுள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து வெளியாகும், "தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: பாக்., உடனான அமெரிக்காவின் விரிவான பாதுகாப்பு உறவு முடிந்து விட்டது. அதனால், பயங்கரவாதத்திற்கு எதிரான பாக்., உடனான உறவை, இனி அளவோடு வைத்துக் கொள்ள, அமெரிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதனால், பயங்கரவாதிகள் மீதான தாக்குதல், ஆப்கனில் நேட்டோவுக்கான பொருட்கள் வினியோகம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த அளவான உறவால், இனி பாக்., பகுதியில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறையும். ஆப்கனில் நேட்டோவுக்கான பொருள் வினியோகம் குறையும். அதேபோல், பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதியுதவியும் குறைக்கப்படும். பாகிஸ்தானும், அமெரிக்கா உடனான தனது உறவை மறுபரிசீலனை செய்வோம் எனக் கூறியுள்ளது.
இருதரப்பிலான ராணுவ ஒத்துழைப்பு, உளவுத் தகவல்கள் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து, விரைவில் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆப்கனில் உள்ள நேட்டோவுக்கான உணவு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் வினியோகம் நிறுத்தப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் முடிவடைந்து விட்டது.
No comments:
Post a Comment