த. தே கூ வினுள் இடம்பெறும் பனிப்போரில் நாம் நடுநிலை வகிப்போம். சித்தார்த்தன்.
புளொட்டினுள் சில்லறைகள் கிடையாது என்றும் கூறுகின்றார்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தலைமைப் பதவிக்காக முன்னாள் ஆயுததாரிகட்கும், ஆயுதம் தாங்காதோருக்குமிடையே பனிப்போர் ஒன்று இடம்பெற்றுவருகின்றது. இந்நிலைமைகள் தொடர்பாக அக்கூட்டமைப்பின் பங்காளியாக தம்மை அண்மையில் இணைத்துக்கொண்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன்அவர்களிடம் இலங்கைநெற் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது.
கேள்வி - நீங்கள் இப்போது முற்றுமுழுதாக தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து விட்டீர்களா?
பதில் - எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் முற்றுமுழுதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றோம்.
கேள்வி -தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு கூட்டமைப்பே அல்ல எனவும் அது புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறுவதற்காக புலிகளால் உருவாக்கப்பட்டதோர் கூட்டு எனவும் கூறிவந்திருக்கின்றீர்கள். தற்போது அக்கூற்றை வாபஸ் பெறுகின்றீர்களா?
புதில் - இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் 2009 போர் முடிவடைந்தபின் அவர்களுடைய நிலைப்பாடு முற்றுமுழுதாக மாறியிருக்கிறது. அங்கு வெளிநாட்டில் புலிகள் என்று பேசப்பட்டாலும் இலங்கையைப் பொறுத்தமட்டில் புலிகள் என்றொரு விடயமே கிடையாது. அது முற்றுமுழுதாக அற்றுப்போன விடயமாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தற்போது புலிகளை ஒருவிடயமாக பார்ப்பதில்லை. 2009 க்கு பின்னர் அவர்கள் புலிகள்தான் ஏகபிரநிதிகள் என்றோ புலிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாகவோ, புலிகளை ஆதரிப்பதாகவோ எந்த இடத்திலும் கூறியதில்லை.
ஆகவே நிலைமைகள் முற்று முழுதாக மாறியிருக்கின்றது. இலங்கையிலே இருக்கின்ற சூழ்நிலையை பொறுத்த மட்டில் கடந்த காலத்தையெல்லாம் சிந்தித்துக்கொண்டு செயற்படுவோமாக இருந்தால் மீண்டும் எங்களுடைய மக்களை பாரதூரமான பாதாளத்திற்கு தள்ளிவிடுவோம்.
இங்குள்ள மக்களும் தன்னார்வ நிறுவனங்களும் எங்களுடன் பேசி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையுமாறு கேட்டார்கள். அதற்கேற்பவே நாம் அவ்வாறு இணைந்து கொண்டுள்ளோம்.
நாம் இணைந்து கொண்ட பின்னர் எற்பட்ட மாற்றத்தை பார்பீர்களானால், வெறும் 64000 வாக்குகளை யாழ் குடா நாட்டிலே பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து பிரச்சாரம் செய்த பின்னர் ஏறக்குறைய 120000 (இது முற்றிலும் எமக்காக அளிக்கப்பட்ட வாக்குகள் என நான் சொல்ல வரவில்லை) வாக்குகளை பெற்றிருக்கின்றது. எனவே மக்கள் இந்த ஒற்றுமையை விரும்புகின்றார்கள் என்பதை உணர முடிகின்றது.
கேள்வி - தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என நீங்கள் கூறினாலும், அவர்கள் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொள்ளுகின்றபோது, புலிகளின் பிரதிநிதிகளை புலம்பெயர் தேசங்களில் திரைமறைவில சந்திப்பதாக கூறப்படுகின்றதே..
பதில் - அவர்கள் அவ்வாறு சந்திக்கின்றார்களா என்பது எனக்கு தெரியாது. சில வேளைகளில் அது பழைய நட்பு ரீதியானதாகவும் இருக்கலாம். எது எவ்வாறாயினும் பகிரங்கமாக அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதே எமக்கு தேவை.
கேள்வி - கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நீங்கள் தலைமை தாங்குகின்ற புளொட் அமைப்பினை தேச விரோத கும்பல் என்றும், ஒட்டுக்குழு என்றும் அதேநேரத்தில் நீங்கள் அவர்களை புலிகளின் எடுபிடிகள் என்றும் வசை பாடி வந்துள்ளீர்கள். இவ்வாறான கருத்துக்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கங்களுக்கான நிவாரணம் பற்றி பேசியதுண்டா?
பதில் - ஆம் நாங்களும் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றோம், அவர்களும் எம்மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருக்கின்றார்கள். துரோகி என்று சொன்னால், புலிகளுக்கு எதிராக இருந்தவர்கள் யாவரும் துரோகிகள் என வர்ணிக்கப்பட்டார்கள், அவ்வாறே நாமும் வர்ணனை செய்யப்பட்டோம். பலமான இயக்கமொன்றின் தவறை சரியாக சொன்னாலும் அது தவறாக மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஓர் காலம் இருந்தது. அதாவது புலிகளை எதிர்ப்பவர்கள் துரோகிகள். நாம் புலிகளை எதிர்த்தோமே தவிர மக்களை எதிர்க்கவில்லை. புலிகளுக்குக்கூட நாம் தீங்கு செய்யவில்லை அவர்கள் செய்கின்ற விடயங்கள் மக்களை ஆபத்தில் போடப்போகின்றது எனக் கூறினோம், ஆனால் அவ்வாறு கூறுவதும் தவறு என்றார்கள். மே 19ம் திகதி நாம் கூறியவை சரி என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.
இன்று உயிரைத் தவிர யாவற்றையும் இழந்த மக்களையே காண்கின்றோம் இம்மக்கள் மத்தியிலே நாம் தொடர்ந்தும் பிளவு பட்டு நிற்கக்கூடாது என்ற காரணத்திற்காக பழை விடயங்களை பழையவையாக விட்டுவிட்டோம்.
கேள்வி - தேர்தலில் ஒற்றுமை வேண்டும் என்பதற்காக இணைந்திருக்கின்றீர்கள் அப்படித்தானே
பதில் - தேர்தலில் மாத்திரமல்ல உரிமை விடயத்திலும் ஒற்றுமை வேண்டும் என்பதற்காவே நாம் இணைந்துள்ளோம்
கேள்வி - இன்று தமிழ் மக்கள் மத்தி;யில் முன்னணியில் இருப்பது அரசியல் உரிமைப் பிரச்சினையா, பொருளாதார பிரச்சினையா?
பதில் - என்னைப்பொறுத்தவரை முன்னணியில் இருப்பது அரசியல் உரிமைப் பிரச்சினையே. ஏனென்றால் சரியானதோர் அரசியல் தீர்வு கிடைத்து நாமே எங்களுடைய பிரதேசங்களை பார்கின்றபோது, சரியான அபிவிருத்தியைச் செய்யமுடியும்.
இன்று அங்கு அபிவிருத்திகள் நடைபெறுகின்றது. ஆனால் அவை மக்களை நேரடியாக சென்றடையவில்லை. மக்களுக்கு என்ன தேவை என்று அறியாமல் கொழும்பிலிருந்து கொண்டு விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகள் தான் பிழை என்று நாம் கூறுகின்றோம்.
அத்துடன் அப்பிரதேச மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைகளே உச்ச பலனை கொடுக்கும் என நம்புகின்றோம்.
அபிவிருத்தி மற்றும் அரசியல் தீர்வு விடயம் இரண்டும் சாமாந்தரமாக செல்லவேண்டும் என விரும்புகின்றோம்.
கேள்வி - கொழும்பிலிருந்து கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களின் பலன் மக்களை சென்றடைவில்லை எனக் கூறுனீர்கள். அவ்விடயங்களில் உள்ள குறைபாடுகளை இனம்கண்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டீhகளா?
பதில் - கூறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் நாங்கள் கூறுகின்ற விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுகின்ற நிலையில் இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
கேள்வி - புளொட் அமைப்பின் வெளி நாட்டுக்கிளைகளின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது?
பதில் - புலிகள் இருந்த காலத்தில் மிகவும் பலவீனமான நிலையிலேயே அவர்கள் இருந்தார்கள். இருந்தபோதும் தம்மால் முடிந்தவற்றை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
கேள்வி - எந்தெந்த நாடுகளில் உங்கள் கிளைகள் இயங்குகின்றன. அக்கிளைகளில் உறுப்பினர்களாக இயங்குகின்றவர்களின் எண்ணிக்கை எவ்வாறு உள்ளது?
பதில் - சுவிஸ், ஜேர்மன், கனடா, பிராண்ஸ் உட்பட இன்னும் சில நாடுகளில் கிளைகள் இயங்குகின்றது. கிளைகளில் எத்தனைபேர் அளவில் உள்ளார்கள் என்பது தொடர்பான சரியான கணக்கு என்னால் தற்போது கூற முடியாது. மிகச் சொற்பமானவர்களே உள்ளார்கள் அவர்களும் முழு நேரமாக இங்குவதில்லை.
கேள்வி - 86 களில் அதிகூடிய ஆட்பலத்தினை கொண்ட அமைப்பென்ற பெருமையை புளொட் அமைப்பு கொண்டிருந்தது. புலம்பெயர் தேசங்களிலே முன்னாள் போராளிகள் என்ற தகவலை திரட்டுகின்றபோதுகூட (புலிகள் உட்பட) புளொட் அமைபினரே அதிகம் காணப்படுகின்றனர். ஆனால் உங்கள் கிளைகளில் சொற்பானவர்களே செயற்படுகின்றதை காணமுடிகின்றது. இந்நிலைமைக்கான காரணம் என்ன?
பதில் - இவர்களில் பலர் புலிகளின் அச்சுறுத்தலால் தப்பி ஓடியவர்கள், அவர்கள் அந்த அச்சுறுத்தல் அங்கும் தொடரக்கூடாது என்ற காரணத்திற்காக ஒதுங்கிக்கொண்டார்கள், சிலர் புலிகளுடன் இணைந்து செயற்படுகின்றார்கள். ஆனாலும் அங்கிருகின்றவர்களில் பலர் எம்முடன் தொடர்பில் உள்ளனர். இங்கு வருகின்றபோது வந்து சந்திக்கின்றார்கள், உதவிகளை செய்கின்றார்கள்.
கேள்வி - புலிகளின் வளர்சிக்கு அவ்வியக்கத்தின் புலம்பெயர் கிளைகள் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது. அக்கிளைகளின் செயற்பாட்டாளர்களால் நிராயுத பாணிகளாக ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தங்கள் பக்கம் இணைத்துக்கொண்டு தலைமைக்கு வலுச்சேர்க்க முடிந்துள்ளது. ஆனால் புலம்பெயர் தேசத்திலே ஆயிரக்கணக்கிலான முன்னாள் புளொட் உறுப்பினர்கள் உள்ளபோதும் உங்கள் கிளைச் செயற்பாட்டாளர்களால் தமது முன்னாள் தோழர்களைக்கூட இணைத்துக்கொள்ள முடியாது போயுள்ளது. இதற்கான காரணத்தை கிளைச் செயற்பாட்டாளர்களிடம் கேட்கின்றபோது, கிளைகள் எவ்வாறு செயற்படவேண்டும என்பது தொடர்பாக சரியான வரையறைகள் தலைமையால் வகுத்துக் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. மறுபுறத்தில் கிளைகளுடன் இணைந்து செயற்படாமல் இருக்கின்ற முன்னாள் உறுப்பினர்களிடம் கேட்கின்றபோது, இங்குள்ள கிளைகள் சில சில்லறைகளாலேயே நிர்வகிக்கப்படுகின்றது இவர்களுடன் இணைந்து செயற்படுவதன் ஊடாக எந்தவொரு இலக்கையும் அடைய முடியாது எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
பதில் - ஏவ்வாறு செயற்படவேண்டும் என்கின்ற வியூகங்களையும் , வரையறைகளையும் நாம் எழுத்துமூலமாக அல்லாவிட்டாலும் வாய்மூலமாக வழங்கியிருக்கின்றோம். உங்களுக்கும் தெரியும் புலிகள் இருந்த காலத்தில் மிக சொர்ப்பமானவர்களே வேலை செய்தார்கள், அவர்களுள் ஒருவரை பொறுப்பாளராக நியமித்து விடயங்களை இயக்கினோம். சில தோழர்கள் அவர்களை சில்லறைகள் என்று சொல்வார்களானால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. எங்களை பொறுத்தவரை நாம் எவரையும் சில்லறை என்றும் பார்க்கவில்லை தாள் என்றும் பார்க்கவில்லை தோழர் என்றுதான் பார்கின்றோம். அவர்களுடன் சேர்ந்து விரும்பாதவர்கள் நேரடியாக எம்மை தொடர்பு கொள்ளலாம்.
எமக்கு தற்போது கட்சியையும் கிளைகளையும் வழர்ப்பது நோக்கமல்ல. இங்கு யாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதே அவா. உதவி செய்ய விரும்புகின்ற தோழர்கள் சிலர் அங்கிருந்து இங்கு வருகின்றபோது நேரடியாக பிரதேசங்களுக்குச் சென்று தம்மால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து செல்கின்றனர். இதுதான் எங்கள் தேவையும்.
கேள்வி - நீங்கள் புலம்பெயர் நாடுகளில் பல கிளைகள் இயங்குவதாக கூறினாலும், எந்த கிளையும் மக்களுடன் தொடர்பில் இல்லை. எந்தக்கிளைக்கும் ஆதரவாளர்கள் என்று எவரும் இல்லை. ஒரிரு நபர்களுடன் மக்களுடன் தொடர்பாடல் இல்லாத கிளைகளின் பயன் என்ன?
பதில் - கிளைகள் மக்களுடன் தொடர்பில் இல்லை என்பதை நான் நம்பவில்லை. நான் சுவிற்சர்லாந்துக்கு வந்திருந்தபோது பலர் வந்து என்னைச் சந்திருந்தார்கள். அங்கிருக்ககூடியவர்கள் இங்குள்ளவர்கள் போல் முழுமையாக செயற்பட முடியாது என்ற ஒரு விடயம் உண்டு. அடுத்து நாம் அவர்கள் அவ்வாறு செயற்படவேண்டும்மென எதிர்பார்கவும் இல்லை.
ஆனால் தற்போது நிலைமைகள் மாறியுள்ளது. முன்னர் மக்கள் புலிகளுக்கே பணத்தினை வழங்கினர். இங்குள்ள மக்களை அழிக்க பணத்தினை புலிகளுக்கு வழங்கிய மக்களுக் தற்போதைய நிலைமைகளை விளங்கப்படுத்தக்கூடிய முயற்சிகளை எடுத்து இங்குள்ள மக்களுக்கு உதவிகளை புரியக்கூடிய செயற்பாடுகளை கிளைகள் எடுக்குமாக இருந்தால் அது சிறப்பாக அமையும்.
கேள்வி - சர்வதேச கிளைகளின் பொறுப்பாளர் என்கின்ற பதவிக்கு போட்டிகள் நிலவுவதாக அறியமுடிகின்றதே?
பதில் - அவ்வாறான பதவியொன்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் எவ்வாறு அப்படியானதோர் போட்டி நிலவ முடியும்.
கேள்வி - தற்போது புளொட் அமைப்பின் செயற்பாடுகள் எவ்வாறுள்ளது?
பதில் - எமது ஆயுதம் தரித்த போராளிகளை முற்றுமுழுதாக நிலைமாற்றி அரசியல் பயிற்சிளை வழங்கி வீடுகளுக்கு அனுப்பியுள்ளோம். முகாம்கள் யாவற்றையும் மூடியுள்ளளோம், இயக்கம் என்கின்ற நிலைமாறி தற்போது அரசியல் கட்சியாக செயற்படுகின்றோம்.
கேள்வி - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை கைப்பற்றுவதற்காக அங்கு பனிப்போர் ஒன்று இடம்பெறுகின்றது. இப்போர் முன்னாள் ஆயுததாரிகளுக்கும் ஆயுதம் தாங்காதோருக்குமானது எனச் சொல்லப்படுகின்றது. இப்பனிப்போரில் நீங்கள் எங்கு நிற்கின்றீர்கள்?
பதில் - நாம் எங்கும் இல்லை. அது அவர்களுடைய பனிப்போர். அவர்களே அதை பார்த்துக்கொள்ளட்டும். நாம் எமது தனித்துவத்துடன் நிதானமாக இருக்கின்றோம்.
கேள்வி - தற்போது காணப்படுகின்ற பிளவு மேலும் விரிசலடைந்தால்?
பதில் - இது விரிசல் அடையக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு அதற்காக முழு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றோம். எந்தப்பக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை.
கேள்வி - அவ்வாறாயின், பிளவு என்பது தவிர்க்க முடியாது என்ற நிலை வந்தால் நீங்கள் எந்தப்பக்கமும் செல்லாமல் தனித்து செயற்படுவீர்களா?
பதில் - அது இப்போதைக்கு கூறமுடியாது. XIII
0 comments :
Post a Comment