பிளாஸ்டிக் கூடை விவகாரம் மூன்றாவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்
மரக்கறி மற்றும் பழவகைகளை கொண்டுசெல்வதற்கு பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டமையைக் கண்டித்து இன்று மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
புறக்கோட்டை மெனிங் சந்தைக்கு முன்பாக இன்று இரண்டாவது நாளாக ஆரம்பமான வியாபாரிகளின் ஆர்ப்பாட்டப் பேரணி கோட்டை ரயில் நிலையத்தினை நோக்கிப் பயணித்தது
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் ,பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தொடரும் பிரச்சினைகளுக்குரிய தீர்வு கிடைக்கும் வரை கொழும்பு மெனிங் சந்தையில் வியாபார நடவடிக்கைகள் இடம்பெறாதென அதன் பிரதம ஏற்பாட்டாளர் எச்.எல்.சந்தனரத்ன குறிப்பிட்டள்ளார்.
உரிய பதில் வழங்கப்படும் வரையில் கூடைகள் மற்றும் சாக்குப் பைகளை மரக்கறிகள் கொண்டுசெல்வதற்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனவும் மெனிங் சந்தையின் பிரதம ஏற்பாட்டாளர் எச்.எல்.சந்தனரத்ன கூறியுள்ளார்.
இதேவேளை, எவ்வாறாயினும் வழமையான முறையில் தம்புள்ளைக்கு மரக்கறிகளை கொண்டு வருமாறு மத்திய மாகாண இராணுவத் தளபதி வர்த்தகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அங்கு சுமூக நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மரக்கறி மற்றும் பழவகைகளைக் கொண்டு செல்லும் போது பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்துவது தொடர்பான சட்டம் முன்னாயத்தம் இன்றி அமுல்படுத்தப்பட்டமையே பிரச்சினை ஏற்படக் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் எனவும், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் பிரச்சினை நியாயமானது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மரக்கறி மற்றும் பழவகைகளைக் கொண்டு செல்வதற்கு பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தாம் கூறவில்லை எனவும், அதற்கு கால அவகாசம் தேவை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மரக்கறி சந்தைகளுக்கு அண்மையில் இன்றைய தினம் விசேட பாதுகாப்பு செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, பிளாஸ்டிக் பெட்டிகளில் மரக்கறி மற்றும் பழங்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என விதிக்கப்பட்டுள்ள கட்டளை தொடர்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் மரக்கறி விவசாயிகள்,வியாபாரிகள் இன்று விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இப்பிரச்சினை காரணமாக சந்தைக்கு கொண்டுவரப்பட்ட பத்து இலட்சம் கிலோ வரையான மரக்ககறி வகைகள் நாசமடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அத்துடன் சந்தையில் காய்கறி, வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், அதன் விலைகளும் மிக அதிகமாக இருப்பதாக நுகர்வோர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment