Sunday, December 4, 2011

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்க மஹிந்த தயாராகவுள்ளார்.

சிறைவாசம் அனுபவித்துவரும் முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவின் குடும்பத்தினருடன் அவரை விடுதலை செய்வது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தான் தாயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக அவரின் பேச்சாளர் பந்துள ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

தனது தந்தையாரை விடுவிக்க அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தலையிடவேண்டும் என சரத் பொன்சேகாவின் இரு மகள்மாரின் ஒருவரான அப்சரா பொன்சேகா வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பாக, கருத்துரைத்த ஜனாதிபதி , பாராக் ஒபாமாவிடம் இது விடயத்தில் பேசுவதை விடுத்து தன்னுடன் நேரடியாக பேச முடியும் என தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விவகாரத்தில் பிறநாட்டு ஜனாதிபதியை தலையிடுமாறு கோருவதை விடுத்து நம்நாட்டு ஜனாதிபதியிடம் நேரடியாக கோர முடியுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி பேச்சாளர், அவ்வாறு வேண்டுதல் விடுத்தால் முன்னாள் இராணுவத் தளபதி விடயத்தில் ஜனாதிபதி கண்டிப்பாக கருணை கூர்ந்து பரிசீலனை செய்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் உள்ள வெள்ளை மாளிகைக்கு செல்வதை விட எவ்வித செலவுகளும் இல்லாமல் அருகாமையில் உள்ள அலறி மாளிகைக்கு ஜெனரல் பொன்சேகாவால் செல்லமுடியும் எனவும் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் போன்று வெளிநாடுகளுக்கு செல்வதால் உள்நாட்டில் எதையும் சாதித்து விடமுடியாது என்ற கருத்து ஜனாதிபதியிடம் மிகவும் ஆழமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment