பிளாஸ்டிக் கூடைகள் கட்டாயப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் ஆர்ப்பாட்டங்கள்
மரக்கறி மற்றும் பழங்களை கொண்டு செல்லும் போது பிளாஸ்டிக் கூடைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொழும்பு,தம்புள்ளை, பண்டாரவளை, ரன்ன, கந்தபொலை, புத்தளம், நுரைச்சோலை ஆகிய பிரதேசங்களில் இன்று காலை மற்றும் முற்பகல் முதல் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தம்புள்ளை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பெருந்திரளான விவசாயிகள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்புள்ளை நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தை அண்மித்த பகுதியில் டயர்களை எரித்தும் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தம்புள்ள நகருக்கு அருகே யாழ் - கண்டி வீதியான ஏ 9 பாதையை மறித்து அதில் மரக்கறிகளை கொட்டி சுமார் 1000 விவசாயிகள் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஏ9 மற்றும் ஏ6 வீதிகளின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
. இதேவேளை, பிளாஸ்டிக் கூடை பாவனை கட்டாயமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெனிங் சந்தை வியாபாரிகள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் தறபோது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிக்கல் நிலைமை தொடர்பில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மரக்கறி மற்றும் பழங்களை பிளாஸ்டிக் பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தை கைவிடப் போவதில்லை என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆயினும், லேன்ட் மாஸ்டர் எனப்படும் டிரக்டர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் மரக்கறி மற்றும் பழங்களை கொண்டு செல்லும்போது பிளாஸ்டிக் பெட்டிகள் பயன்படுத்தத் தேவையில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment