தமது ராணுவத்தினர்மீது லெபனானில் தாக்குதல் நடாத்தப்பட்டதன் பின்னணியில் சிரியா இருந்தது என்று பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கனவே உலக நாடுகளின் விரோதத்தைச் சம்பாதித்துள்ள சிரியாவின் நிலைமை, இந்தக் குற்றச்சாட்டுடன் மிக மோசமாக மாறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் Alain Juppe நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சிரியாவை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் குறிப்பிடும் தாக்குதல், கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு லெபனானில் நடைபெற்றது.
அங்கு பணியிலுள்ள பிரெஞ்சு அமைதிப் படையினர் ரோந்து சென்றபோது, அவர்களைக் குறிவைத்து வீதியோரக் குண்டு ஒன்று வெடிக்கப்பட்டது. அதில் 5 பிரெஞ்சு ராணுவத்தினர் காயமடைந்தனர். லெபனானில் வெளிநாட்டு அமைதிப் படையினர்மீது சமீப காலத்தில் நடாத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது.
“இந்த வெடிகுண்டை வெடிக்க வைத்ததன் பின்னணியில் அவர்கள் (சிரியா) இருக்கிறார்கள் என்று நம்புவதற்கு எம்மிடம் பல காரணங்கள் உள்ளன. ஆனால் எம்மிடம் ஆதாரம் ஏதும் கிடையாது” என்று பிரெஞ்ச் வெளியுறவு அமைச்சர் ஆர்.எஃப்.ஐ. ரேடியோவுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
இப்படியான தாக்குதல்களில், அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது, அவர்களாக முன்வந்து உரிமை கோரும்போதுதான் தெரியவரும். காரணம், பதட்டம் அதிகமான இப்படியான இடங்களில், அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் தீவிரவாத அமைப்பினரை மீறி, எந்தத் தகவலையும் பெற்றுக்கொள்ள முடியாது. அப்படியிருந்தும், குறிப்பிட்ட தாக்குதலின் பின்னணியில்ல் சிரியா இருந்தது என்பதை பிரான்ஸ் கூறுகின்றது என்றால், அவர்களிடம் ஏதோ ஒரு உறுதியான தகவல் இருக்க வேண்டும்.
வெளியுறவு அமைச்சரின் கூற்றிலிருந்து, தமக்கு கிடைத்த தகவலை அவர்கள் வெளியிட விரும்பவில்லை என்பது நன்றாகவே புரிகின்றது.
அமைச்சரை ரேடியோவில் பேட்டி கண்டவர், “லெபனானில் நடாத்தப்படும் இப்படியான குண்டுவெடிப்பு தாக்குதல்கள் அநேகமாக ஹிஸ்பொல்லா அமைப்பினரால்தான் நடாத்தப்படுவது வழக்கம். அவர்களின் பின்னணியில் சிரியா நின்று, பிரெஞ்ச் படையினரைத் தாக்குமாறு செய்தது என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, அதற்கு குழப்பமான பதில் ஒன்றைக் கொடுத்தார் Alain Juppe.
“அப்படியல்ல, ஹிஸ்பொல்லா என்பது லெபனானில் உள்ள சிரியாவின் ஆயுதப் பிரிவுதானே” என்பதே அவர் கொடுத்த பதில்.
அது உண்மையல்ல என்பது நிச்சயமாக அவருக்கே தெரியும்! அப்படியிருந்தும், எதற்காக இப்படியொரு அதீத கற்பனையான குற்றச்சாட்டு? லெபனானின் ஒரு மூலையில் நடைபெற்ற தெருமுனைத் தாக்குதலில் சிரியாவை இழுக்க வேண்டும்?
பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன, ஜேர்மனி ஆகிய நான்கு நாடுகளும் ஐ.நா. செக்யூரிட்டி கவுன்சில் கூட்டத்தில் சிரியா தொடர்பான பிரேரணையைக் கொண்டுவர முயல்கின்றன. கடந்த அக்டோபரில் இவர்கள் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்தபோது, சீனாவும் ரஷ்யாவும் தத்தமது வீட்டோ அதிகாரங்களைப் பயன்படுத்தி, பிரேரணை நிறைவேறாதபடி செய்துவிட்டன.
ஏற்கனவே கொண்டுவரப்பட்டு நிராகரிக்கப்பட்ட ஒரு பிரேரணை 6 மாதங்களுக்குள் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டுமென்றால், அதைக் கொண்டுவரும் நாடு தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். இப்போது புரிகிறதா இதிலுள்ள சூட்சுமம்?
பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் Alain Juppe, தமது ராணுவத்தினருடன்..
No comments:
Post a Comment