இலங்கை எதிர்பார்த்ததைவிட அதிக சுற்றுலாப்பயணிகள் இவ்வாண்டு வருகை.
கடந்த நவம்பர் மாத இறுதியில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 7 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது இரண்டு லட்சம் உல்லாசப் பயணிகளினால் அதிகரித்துள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 5 லட்சத்து 69 ஆயிரத்து 849 இலிருந்து 7 லட்சத்து 58 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது. இது, 33 சதவீத வளர்ச்சியாகுமென, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வாண்டு இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை, அரசாங்கத்தின் இலக்கான 7 லட்சத்து 50 ஆயிரத்தை மீறி சென்றுள்ளதாக, பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அடுத்த மாதமளவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 8 லட்சத்தை தாண்டுமென, எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தே வருகை தந்துள்ளனர். பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டு அதிகரித்துள்ளதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்காசிய வலயத்திலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எணணிக்கை, ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 707 இலிருந்து 2 லட்சத்து 11 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில், கூடுதலான அதிகரிப்பு காணப்படுகிறது.
0 comments :
Post a Comment