Saturday, December 17, 2011

சிவசக்தி ஆனந்தனின் அறிக்கை இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும். A.H சனூஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்; சிவசக்தி ஆனந்தன் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு அறிக்கைகளை ஊடகங்களுக்கு விடுவது ஆரோக்கிய மற்ற செயலென மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.சனூஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
குறித்த அறிக்கையானது, பன்னெடுங்காலம் பிட்டும், தேங்காய் பூவும் போல் தமிழ், முஸ்லிம் மக்களாகிய நாம் சொந்த ஊரான விடத்தல்தீவில் வாழ்ந்த வாழ்க்கையினை கொச்சைப்படுத்துவதாகவும், இரு சமூகங்களுக்கிடையில் இன முறுகலைத் தோற்றுவித்து, அதில் அரசியல் நடாத்த முயலும், நடவடிக்கையாகவும்,நாம் காண்கின்றோம். அத்துடன் பாரபட்சமின்றி இன, மத, மொழி, வேறுபாடுகளின்றி சேவை செய்யும் வன்னி மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்ட கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை, குறை கூறி மன நிறைவு பெற முயலும் இழிசெயலென நாம் உணர்கின்றோம். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஏனெனில் 1990 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் நடத்தப்பட்ட இனச்சுத்திகரிப்பில், இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் அவலத்ததை பற்றி, எந்த அக்கறையும் கொள்ளாத தமிழ் தேசிய கூட்டமைப்பும், குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், எமது முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தைப் பற்றி சற்றுக் கூட சிந்திக்காத இவர்கள், வெறுமனே 42 குடும்பத்தினரை சில மீற்றர், தூரம் இடம் பெயர்த்தி குடியமர்த்தும் நடவடிக்கைக்கு இவ்வளவு தூரம் ருத்ர தாண்டவம் ஆடுவது கேள்விக்கும், கேள்விகுரயதுக்குமாக உள்ளது. சன்னார் கிராமத்தில் வாழும் மக்கள் எட்டப்பட்ட முடிவுகளை ஏற்றுக் கொண்டு தயாராக இருக்கும் இவ்வேளையில், அம்மக்களை அச்சுறுத்தி அவர்களிடம் கையொப்பம் பெற்று அதனை ஊடகங்களுக்கு காட்டும் செயல் மிகவும் இழிவானதாகும்.

தற்போது இக்கிராமத்தில் குடியேறியுள்ள மக்கள் நிரந்தரமாக இப்பிரதேசத்தை வசிப்பிடமாகாக் கொண்டவர்கள் அல்ல, இவர்கள் யாழ் மாவட்டத்ததைச் சேர்ந்தவர்கள், விடத்தில் தீவு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்த தோட்டங்களில் பணியாற்ற வந்த குடும்பங்களேயன்றி , இவர்கள் பெருந்தோட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் யாழிலிருந்து வந்த போது, அவர்களுக்கு அபயக் கரம் நீட்டி அடைக்கலம் கொடுத்தவர்கள் விடத்தல் தீவு முஸ்லிம்கள் தான் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நாம் வெளியேற்றப்பட்ட போதும்,அவர்கள் எம்மவர்களின் காணிகளிலேயே வாழ்ந்தார்கள் என்பதையும் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன்.

இது இவ்வாறு இருக்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் அறிக்கையானது, 1986 ல் காணிக் கச்சேரி வைக்கப்பட்டு, வழங்கப்பட்ட காணிகளில் இம்மக்கள் வாழ்ந்தார்கள் என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். மேலும் யுத்தத்தால் முல்லவாய்க்கால் வரை விரட்டப்பட்டு, மெனிக் பார்ம் முகாம்களில், முடக்கப்பட்டு பின்னர், ஈச்சிளவக்கையில் குடியமர்த்தப்பட்ட இவர்களை, விடத்தல்தீவு தமிழ் , முஸ்லிம் பூர்வீக குடிமக்களின் மீள்குடியுயேற்றத்தை தடுக்கும், நோக்கோடும் , பாரிய அரசியல் சதி திட்டத்தோடும் தான் சன்னாரில் இவர்கள் குடியேற்றப்பட்டனர். இதில் 90 சதவீதமானவர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதற்கான சகல ஆவணங்களும் பிரதேச செயலாளரிடம் உள்ளது.

இக்குடியேற்றத்தை நடத்திய சதி காரர்களின் திட்டத்திற்கு பகடைக்காய்களாக்கப்பட்டவர்கள் பாவம் அற்த அப்பாவி மக்கள். இவர்கள் ஈச்சிலவக்கை முதல் சன்னார் வரை, விடத்தல் தீவு, பெரியமடு ஓரமாக சுமார் 4 கிலோ மீட்டர்n தூரம் வாழ்கின்றனர். இவர்களிடம் நாம் வினயமாக கேட்டுக் கொண்டது, 400 மீற்றர் அகலமான காணியையே அன்றி முழுக்காணியையும் அல்ல. இந்த எல்லைக்குள் அமைக்கப்பட்ட முன்பள்ளி கட்டிடம் இருப்பதால் மேலும் 50 மீற்றர் குறைத்து, 350 மீற்றர் அகலத்திலான காணியே எமக்கு அரச அதிகரிகளால், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படும் 42 குடும்பங்களுக்கு தலா ஒரு ஏக்கர்வீதம் (தற்போதுள்ள அரை ஏக்கருக்கு பதிலாக) காணி வழங்கவும், மேலும் தேவைகளை பூர்த்தி செய்யவும் பிரதேச செயலாளர் தலைமையிலான அரச அதிகாரிகளால் பேச்சுக்கள் நடத்தப்பட்டு சமூகமான முடிவும் எட்டப்பட்டது.

இவ்வாறு நியாயமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுக்கு தெரியாத நிலையில், அபாண்டத்தை சுமத்தி அமைச்சர் றிசாத் பதீயுதீனை இனவாதியாக காட்டும் நாடகத்தை ஒரு போதும் ,வட புல தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அறிக்கைகள் மூலம் ஏற்கனவே தமிழ் சமூகத்தை காட்டித் கொடுத்து, அதனூடாக பல சுகபோகங்களை அனுபவித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு 21 வருடங்களாக நாங்கள் அனுபவித்துவரும் அகதி வாழ்க்கை குறித்து எங்கே தெரியப்போகின்றது.

சன்னாரில் விவசாயம் செய்துள்ள காணிகள் கூட எமது முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானது. அதற்கான அனைத்து ஆவணங்களும் எம்மிடம் உள்ளது. இம் மக்களை நாம் ஒதுக்கி வைப்பதென்றால், நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அடித்து விரட்டிய போதே, நாமும் இவர்களை விரட்டியிருப்போம், நாம் இன்றும் அவர்கள் எம்முடன் வாழட்டும் என்றே நினைக்கின்றோம். அதுவே அமைச்சர் றிசாத் பதீயுதீன் அவர்களின் கருத்துமாகும். அன்றி இன ரீதியான முன்னெடுப்புக்களோ வாக்கு வங்கியை கூட்டும் நோக்கமோ அல்ல, வன்னி முழுவதும் பரந்து கிடக்கும், அமைச்சர் அவர்களின் வாக்கு வங்கியை சன்னாரில் மட்டும், அமைப்பது பாரிய கஸ்டமா என கேட்க விரும்புகின்றேன். வன்னி மாவட்ட தமிழ் பேசும் ,தமிழ் , முஸ்லிம் மக்கள் அளித்த வாக்கினால் அமைச்சராக இன்று எல்லோருக்கும் பணியாற்றும் நல்லவரை, தூற்றுவது எமது மார்க்கத்தின் அடிப்படையில் அனுமதிக்க முடியாது என்பதை மறியாதையுடன் கூறிக் கொள்கின்றோம்.

மேலும் இம்மக்களது குடியேற்றம் தொடர்பாக அறிக்கை விடுபவர்கள் எம மக்களின் மீள்குடியேற்றம் குறித்து என்ன செய்துள்ளார்கள். 400 குடும்பங்கள் 1990 ல் வாழ்ந்த விடத்தல் தீவில், தறபோது 1200 குடும்பங்கள் வாழ்வது எவ்வளவு கஸ்டமானது. எமது மக்கள் எங்கே மீள்குடியேறுவது, இம்மக்களின் மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கையெடுப்பது யார், அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுக்கும் நடவடிக்கைகள் இன ரீதியானது என்றால், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் பேசுவது என்ன என கேட்கின்றோம். கேளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுக்கு விடத்தல்தீவு, பெரியமடு பற்றி நன்றாக தெரியும், அவர் அலிகார் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதை கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.

கடந்த 08.12.2011 அன்று மன்னார் கச்சேரியில் சன்னார் காணி சம்பந்தமாக கூட்டமொன்று இடம் பெற்றதாகவும், அதில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள், மதத்தலைவர்களையும் , ஊடகவியலாளர்களையும் கடுமையாக சாடியுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருப்பது முற்றிலும் பொய்யாகும். அவ்வாறு சன்னார் சம்பந்தமான எந்த கூட்டமும் இடம் பெறவில்லை. மடு மாதா தேவாலயத்திற்கு குடிநீர் வழங்கும் திட்ட அடிக்கல் நடும் நிகழ்வில், அமைச்சர் தீனேஸ் குணவர்தன தலைமையில் நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருந்த போது , அங்கு வந்த தகவலில் மன்னாரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாகவும், அரச அதிபரிடம் மகஜர் கொடுக்க வேண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதீயுதீன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் ஆயர் அதி சங்கைக்குரிய ராயப்பு ஜோசப் உட்பட பலர் கொண்டிருந்தனர். இந்த நிகழ்வு முடிவுற்றதும் அமைச்சர் றிசாத் பதியுதீன், மற்றும், செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அவர்களும், வடமகாண ஆளுநர் சந்திரசிறி அவர்களும் மன்னார் கச்சேரிக்கு சென்று அம்மக்களது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக் கொடுத்தனர். அதன் பிறகு அங்கு எவ்வித கூட்டமும் இடம் பெறவில்லை, நானும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர சிவசக்தி ஆனந்தன் அவர்கள் அமைச்சர் றிசாத் அவர்கள் மதத் தலைவர்களை பேசியதாகவும், அந்த கூட்டத்தில் ஊடகவியலாளர்களை சாடியதாகவும் தெரிவித்ததாக கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை. இறுதியாக வடக்கில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்து மீண்டும் இன ரீதியான மோதலை ஏற்படுத்த கடும் போக்குடன் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயற்பாடுகளை தோல்வியடையச் செய்ய எமது பிரதேச தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும். இனி எம்மிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, யுத்தத்துக்கு வழிந்து சென்று எமது மக்களின் உயிர்கள், உடமைகள் என்பவற்றை இழக்கச் செய்தவர் தமிழ் தேசிய கூட்டமைப்பே என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள் என்றும் பிரதேச சபை உறுப்பினர் சனூஸ் வெளியிட்டுள்ள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment