Thursday, December 8, 2011

80 வயது கோடீஸ்வர தாத்தாவை மணந்தார் 18 வயது இளம்பெண்

தமிழகத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர். "திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என என் தந்தை கூறியதால் கழுத்தை நீட்டினேன்" என மணப்பெண் கதறினார்.

ஆந்திராவில் உள்ள சித்தூரை சேர்ந்தவர் வரதய்யா (80), கோடீஸ்வரர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி இறந்தார். இவருக்கு 48 வயதில் மகன், 46, 44 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 19 வயதில் பேத்தி உள்ளார்.

இந்த நிலையில், வரதய்யாவுக்கு 2ம் திருமண ஆசை ஏற்பட்டது. தனது குடும்பத்தினருக்கு தெரியாமல், பெண் பார்க்கும் படலத்தில் ரகசியமாக ஈடுபட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கரிம்பேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா - முனியம்மாள் தம்பதியின் மகளான 18 வயது தனலட்சுமியை பெண் பார்த்து, திருமணம் செய்ய பேசி முடித்தார். தனலட்சுமி 10ம் வகுப்பு படித்துள்ளார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு 80 வயது முதியவரை தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததை அறிந்து தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பெற்றோரிடம் போராடினார். "திருமணத்துக்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்" என தந்தை மிரட்டியதால் பயந்துபோன தனலட்சுமி, வேறு வழியின்றி கட்டாய திருமணத்துக்கு சம்மதித்தார்.

இதையடுத்து, சித்தூர் மாவட்டம் பலமனேர் அடுத்த முகலி கிராமத்தில் உள்ள முகலீஸ்வரர் கோயிலில் ரகசிய திருமணம் நடந்து முடிந்தது. இதற்கு கோயில் அதிகாரிகள் சிலரும் உடந்தை எனக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும், வரதய்யா, தனது புது மனைவியுடன் சித்தூர் கிரீம்ஸ் பேட்டையில் ரகசியமாக எடுத்து வைத்திருந்த வாடகை வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே, 18 வயது இளம்பெண்ணை 80 வயது தாத்தா திருமணம் செய்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு விரைந்தனர்.

இது குறித்து தனலட்சுமியிடம் கேட்டபோது, "இந்த திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பமில்லை. என் தந்தை தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதால் ஒப்புக் கொண்டேன்" என கண்ணீர் மல்க கூறினார். 80 வயது தாத்தாவின் ரகசிய திருமணம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com