Monday, December 19, 2011

வடக்கில் 240,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கைக்கு திட்டம்.

வடபுலத்தில் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கையை மேற்கொள்ள, திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளால் இடம்பெயர்ந்த மக்கள், மீள்குடியேறியுள்ள பிரதேசங்களிலும், இம்முறை நெற்செய்கையை ஆரம்பிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட நிலையிலிருந்த பல ஏக்கர் வயல் காணிகளில், நெற்செய்கை மேற்கொள்ளப்படும். இதற்கென, அரசாங்கம் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளது. கடந்த போகத்தில் மழை காரணமாக, விளை நிலங்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கென, விவசாய அமைச்சினால், விதைநெல் வழங்கப்பட்டுள்ளது. சகல விவசாயிகளுக்கும், உரமானியமும் வழங்கப்படுகிறது. இம்முறை அதிஉயரிய விளைச்சலை பெறுவதே, நோக்கமென, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பண்டிகைக்காலத்தில் பற்றாக்குறையின்றி அரிசி மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகிப்பதற்காக, அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அரிசிக்கான பற்றாக்குறையை தோற்றுவித்து, விலையினை அதிகரிக்க ஒருசில வர்த்தகர்கள் முயற்சிப்பதாக, தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளள. பண்டிகைக் காலங்களில் இதற்கு முன்னரும், இவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், எதுவித பற்றாக்குறைகளுமின்றி, அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க, அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டொன் நெல்லினை அரிசியாக மாற்றியமைக்க, நெற் சந்தைப்படுத்தும் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டொன் நெல், களஞ்சியசாலையில் இருப்பதாக, நெற் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் கே.பி. ஜயசிங்க தெரிவிக்கிறார். இதனால் பற்றாக்குறையின்றி அரிசியை விநியோகிக்க, நெற் சந்தைப்படுத்தும் சபைக்கு முடியுமெனவும், அவர் தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக, சதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் போதியளவு அரிசி, இருப்பில் உள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment