16 பேருக்கு குறைந்த தண்டனை.. இரு கைகளையும் வெட்டினோம்! 20 பேருக்கு தலை!!
“எமது பகுதிக்குள் சந்தேகத்துக்குரிய முறையில் நடமாடிய சுமார் 20 ஆட்களை பிடித்து விசாரித்துவிட்டு கொன்று விட்டோம்” என்று கூறி அதிரவைத்துள்ள தீவிரவாத இயக்க தலைவர் ஒருவர், “இந்த 20 பேரும், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.-க்காக எமது பகுதிக்குள் உளவு பார்க்க வந்தவர்கள் என்று நாம் நம்புகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இந்த 20 பேரும், எந்த நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தப்படவில்லை.
குவைத்தில் இருந்து வெளியாகும் அஸ்-சயாசா பத்திரிகைக்கு இன்று (புதன்கிழமை) பேட்டியளித்த தெற்கு ஏமனிலுள்ள அல்-காய்தா ஆதரவு தீவிரவாத இயக்கத் தலைவர் ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“கொல்லப்பட்ட 20 பேரும் சி.ஐ.ஏ. உளவாளிகள் என்பதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா?” என்று கேட்கப்பட்டபோது, “ஆதாரம் சேகரிப்பதற்கு எல்லாம் எமக்கு நேரம் கிடையாது. இந்த 20 பேரில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணை என்றெல்லாம் நேரத்தை விரயம் செய்யாமல், கொன்றுவிட்டோம்” என்று பதில் கொடுத்துள்ளார் அவர்.
அவரது பேட்டியில் தெரிவிக்கப்பட்ட மற்றொரு தகவலின்படி, “திருடினார்கள் என்ற குற்றச்சாட்டில் வேறு சிலரை நாம் கைது செய்தோம். அவர்கள் செய்துள்ள குற்றம் திருட்டு என்பதால், மரண தண்டனை விதிக்கும் அளவில் அது இல்லை. அதனால், அவர்களுக்கு குறைவான தண்டனையே வழங்கப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 16 பேருக்கு, இரு கைகளையும் வெட்டிவிட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டோம்”
இந்த எக்ஸ்பிரஸ் தண்டனைகள் ஏமன் தெற்குப் பகுதியில் உள்ள அப்யான் மாகாணத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இயக்கத் தலைவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே அப்யான் மாகாணத்தில் ஏமன் அரசு ராணுவத்துக்கும், அல்-காய்தா ஆதரவு தீவிரவாத இயக்கத்துக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகின்றது. இவர்களுக்கு இடையிலான யுத்தத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக மக்கள் அப்பகுதியைவிட்டு வெளியேறியபடி உள்ளனர். யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை சுமார் ஒன்றரை லட்சம் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
அது பற்றியும் கருத்து தெரிவித்துள்ள தீவிரவாத இயக்க தலைவர், “யுத்தம் நடைபெறும் இடத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறிச் செல்வதும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே. அவர்கள் அங்கிருந்து வெளியேறுகிறார்கள் என்றால், அல்-காய்தாவில் நம்பிக்கை வைக்காமல் வெளியேறுவதாகவே அர்த்தம் வருகின்றது. எம்மீது நம்பிக்கையில்லாமல் வெளியேறும் பொதுமக்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று ஆலோசித்து வருகின்றோம்” என்று கூறியுள்ளதாக குவைத் பத்திரிகை தெரிவித்துள்ளது!
சும்மா சொல்லக்கூடாது.. ரியலாகவே ‘அதிர வைக்கும் பேட்டி’ என்றால் இதுதான்!
0 comments :
Post a Comment