Tuesday, December 13, 2011

எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கொழும்பில் இரவு கார் ஓட்ட பந்தயம்

சர்வதேச சுற்றுலாப்பயணிகளையும், உள்நாட்டவர்களையும் கவரும் வகையில் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கையில் இரவு கார் ஓட்டப் பந்தயம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பகுதியில் இந்த கார் ஓட்டப் பந்தயம் இடம்பெறவுள்ளது.

இந்த ஓட்டப்பந்தயத்தில் பிரபல்யம் வாய்ந்த கார் வகைகள் பயன்படுத்தப்படவுள்ளன. இலங்கையின் புகழ் பெற்ற கார் பந்தய வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் இந்த போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.

இந்த போட்டி இடம்பெறும் காலப்பகுதியில் மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள சில வீதிகள் மூடப்படவுள்ளதாகவும், போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெனவும், மோட்டார் வாகன போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

மோட்டார் கார் பந்தயம் இடம்பெறும் வீதிகள் வருமாறு: கோட்டை லோட்டஸ் வீதி, கலதாரி ஹோட்டலுக்கு அருகில் ஆரம்பமாகி செரமிக் சந்தி, சீ.டி.ஓ.சந்தியில் திரும்பி செத்தம் வீதி, பாரொன் ஜயதிலக மாவத்தையில் சென்று வலது புறமாக திரும்பி ஜயலிக மாவத்தை யோக் வீதிக்கு சென்று யோக் வீதி வங்கி மாவத்தைக்கு பயணித்து தெற்கு பக்கம் திரும்பி ஜனாதிபதி மாவத்தைக்குச் சென்று என்.எஸ்.ஏ.சுற்றுவட்டம் ஊடாக மீண்டும் லோட்டஸ் வீதிக்கு வந்து ஆரம்ப இடத்தை அடையும்.

இதனால் எதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் குறித்த நேரத்திற்கு கொள்ளுபிட்டி சந்தி, பித்தள சந்தி, இப்பன்வல சந்தி, காமினி சுற்றுவட்டம், சினோர் சந்தி, கான் சுற்றுவட்டம், கோல்பேஸ் சுற்றுவட்டம், ஈகல் சுற்றுவட்டம், பான் மணிக்கூட்டுக்கோபுரம், ஒல்கோட் மாவத்தை மற்றும் சீனோர் சந்தி ஊடாக கொழும்பு கோட்டைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

No comments:

Post a Comment