நைஜீரியாவில் தேவாலயங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலியாயினர். நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள நகரங்களில் பழமைவாத முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.அந்த பகுதியில் ஷிரியத் சட்டத்தை அமல்படுத்தக்கோரி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 22 ஆம் தேதி முதல் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் இராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில் மடலா மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அந்த தேவாலயத்துக்கு வெளியே சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இதில் தேவாலயமும், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதம் அடைந்தன. அருகில் இருந்த கட்டிடங்களும் அதிர்ந்ததில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. எனினும் சேதங்கள் குறித்த முழு விபரங்களும் உடனடியாக தெரியவில்லை.
இந்த குண்டு வெடிப்பு மற்றும் கலவரத்தில் இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர். டமட்ரு, போகோ ஹரம், பொம்போமரி உட்பட பல நகரங்களுக்கும் வன்முறை தீவிரமாக பரவி வருகிறது. தீவிரவாதிகளுடன் மதவாதிகளும் சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்பு நிலைமையை சமாளித்து வந்த இராணுவம் இப்போது தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. மதவாதிகளின் ஆதரவு கிடைத்திருப்பதால், தீவிரவாதிகளின் கை ஓங்கி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக அங்கு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே நைஜீரிய அரசு, நட்பு நாடுகளின் இராணுவ உதவியை கோரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment