யாகூ நிறுவனத்தை வாங்கும் முயற்சிகளில் மைக்ரோசாப்ட் மீண்டும் களமிறங்கியுள்ளது.முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் யாகூவை 50 பில்லியன் டாலர் (596 கோடி ரூபாய்) கொடுத்து வாங்க மைக்ரோசாப்ட் முன் வந்தது. ஆனால், யாகூ இன்னும் அதிக மதிப்புடையது என்று கூறி, அதை விற்க மறுத்துவிட்டார் யாகூ நிறுவனர் ஜெர்ரி யாங்.
இந் நிலையில் மீண்டும் யாகூவை வாங்கும் முயற்சிகளில் மைக்ரோசாப்ட் இறங்கியுள்ளது. இது தொடர்பாக யாகூவுடன் ரகசிய ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் யாகூவின் சில முக்கிய வரவு, செலவுக் கணக்குகளை மைக்ரோசாப்ட் ஆராய யாகூ அனுமதித்துள்ளது.
இப்போது யாகூ சர்ச், மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்தில் தான் செயல்பட்டு வருகிறது. இதனால் சர்ச் மூலம் கிடைக்கும் வருவாயில் 12 சதவீதத்தை மைக்ரோசாப்ட்டுக்கு யாகூ வழங்கி வருகிறது.
இதற்கிடையே பொருளாதாரரீதியில் தேக்க நிலையில் இருக்கும் யாகூ நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு அடுத்தவாரம் கூடி ஆலோசிக்கவுள்ளது. யாகூவின் ஆசிய பிரிவை விற்பது, சீனாவின் அலிபாபா நிறுவனத்தில் உள்ள யாகூவின் பங்குகளை விற்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.
இதையடுத்து யாகூவின் சில பிரிவுகளையோ அல்லது மொத்தமாக யாகூ நிறுவனத்தையோ வாங்குவது குறித்து மைக்ரோசாப்ட்டும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இப்போது மைக்ரோசாப்ட் 57 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதியை கையிருப்பில் வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment