ரணில் விக்ரமசிங்க கட்சியின் யாப்பை மீறியுள்ளார் - மைத்திரி குணரத்ன
பிரதி எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை செயற்குழு நியமித்துள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவரின் அதிகாரங்கள் வேறு ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை கட்சியின் யாப்பை மீறும் செயலாகும் என தென்மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு பிரதித் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பதில் எதிர்க்கட்சித் தலைவராக வேறொருவர் நியமிக்கப்பட்டதன் மூலம் கட்சியின் தலைமைத்துவம், கட்சியின் யாப்பை மீறியுள்ளதாக தென் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பாக விசாரணை ஒன்றை நடத்துமாறு வலியுறுத்தி கட்சியின் மறுசீமைப்பு குழுவினரால் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
கட்சியின் யாப்பை மீறியமை தொடர்பாக 19 குற்றச்சாட்டுக்கள் அடங்கியதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுப் பத்திரத்தை தென் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மூலமாக கையளிக்கவுள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய பிரதி எதிர்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, பதில் எதிர்கட்சித் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஜனநாயக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ளார்.
அவர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் பதில் எதிர்கட்சித் தலைவராக செயற்படுவதற்கு எதிர்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் வகையில் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment