Thursday, November 10, 2011

பாக்கிஸ்தான் பாடப் புத்தகங்களில் இந்துக்கள் இஸ்லாத்தின் எதிரிகள் எனச் சொல்லப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பாடப் புத்தகங்களில், சிறுபான்மையினத்தோரை குறிப்பாக, இந்துக்களை, "இஸ்லாத்தின் எதிரிகள்' என குறிப்பிட்டிருப்பதாக, அமெரிக்க அரசின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. "சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன்' தனது 139 பக்க அறிக்கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் பாடப் புத்தகங்களில், இந்தியா மற்றும் பிரிட்டன் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் நிறைய காணப்படுகின்றன. குறிப்பாக, இந்துக்கள் பற்றி அடிக்கடி குறிப்பிட்ட முறையில் விமர்சனம் பாடப் புத்தகங்களில் உள்ளன. நடுநிலையாக நின்று வரலாற்றைப் புரட்டினால், இந்துக்களும் இஸ்லாமியர்களும் மத நல்லிணக்கம் பேணியது தெரியவரும்.

ஆனால், பாக்., பாடப் புத்தகங்களில், இந்துக்கள் மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளாகவும், இஸ்லாத்தின் எதிரிகளாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சகிப்புத் தன்மையற்ற நிலை, கிறிஸ்தவர்கள், அகமதியாக்கள் மீதும் காட்டப்பட்டுள்ளது. அகமதியாக்கள் தங்களை இஸ்லாமியர்கள் என்றே கூறிக் கொள்கின்றனர். ஆனால், பாகிஸ்தான் சட்டப்படி அவர்கள் இஸ்லாமியர்கள் அல்லர்.

ஜியா உல் ஹக் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பின், பாடப் புத்தகங்கள் இஸ்லாமிய மயமாக்கப்பட்டன. 2006ல் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர அரசு முயன்றபோது, பழமைவாதிகள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், பாடத் திட்ட மாற்றம் கைவிடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கமிஷன் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment