இலங்கை செய்திகளை சுமந்துவரும் இணையத் தளங்கள் ஊடக அமைச்சில் பதிவு செய்ய வேண்டும்
இலங்கை தொடர்பாகவோ இலங்கை வாழ் மக்கள் தொடர்பாகவோ செய்திகளை, தகவல்களை, அல்லது படைப்புக்களை வெளியிடும் இணையத்தளங்கள் இலங்கையின் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இலங்கையின் தகவல் திணைக்களம் விதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதிவு செய்யப்படாத இணையங்கள் இலங்கையில் தடை செய்யப்படும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. இதன்படி இலங்கையில் இருந்தோ அல்லது இலங்கைக்கு வெளியில் இருந்தோ செயற்படும் இணையத்தளங்கள் இலங்கையின் ஊடக அமைச்சில் விரைவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஊடக அமைச்சு கேட்டுள்ளது.
இலங்கை தொடர்பாக செய்திகளை வெளியிடும் சில இணையத்தளங்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மீறும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், இதன் காரணமாக அவ்வாறு வெளியிடப்படும் செய்திகளால் பலர் அசெளகரியங்களுக்கும் அபகீர்த்திக்கும் உள்ளாகியிருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்தோ அல்லது இலங்கைக்கு வெளியில் இருந்தோ இலங்கை தொடர்பாக செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும் ஊடகங்கள் ஏற்றுக்கொண்டுள்ள ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டும் செய்திகளை வெளியிடுமாறு தகவல் ஊடகத்துறை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது சில இணையங்கள் இலங்கையில் பார்க்க முடியாதவாறு தடைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment