நாளை வெள்ளைக் கொடி விவகார வழக்கின் தீர்ப்பு
நாளை வெள்ளிக்கிழமை 18ம் திகதி, முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா மீதான வெள்ளைக் கொடி விவகார வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர தலைமையிலான குழு நாளை வெள்ளைக் கொடி விவகார வழக்குத் தீர்ப்பை அறிவிக்கவுள்ளது.
இதனை முன்னிட்டு கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக் கட்ட யுத்தத்தில் அரச படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை சுட்டுக் கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் உத்தரவிட்டார் என சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதன் பின்னணியில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வெள்ளைக் கொடி விவகார வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வெள்ளைக் கொடி விவகாரம் குறித்து அரச கட்சி, எதிர்கட்சி, பாதுகாப்பு பிரிவினர், ஊடகங்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் நீதிமன்றில் சாட்சியங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில் விசாரணைகள் யாவும் நிறைவடைந்து, நாளைய தினம் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பிறந்த தினம் என்பது குறிப்படத்தக்கது.
இதேவேளை, வெள்ளைக் கொடி வழக்கு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளதால் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் சட்டவிரோத எதிர்ப்பு கூட்டம் நடத்துபவர்களை விரட்டியடிக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வாழைத்தோட்டப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட அறிக்கை ஒன்றை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இவ் அறிவித்தலை விடுத்துள்ளது.
வெள்ளைக் கொடி வழக்கு தீர்ப்பு நாளை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் சமாதானத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட சிலர் தீர்மானித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் தகவல் வழங்கியுள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர்.
0 comments :
Post a Comment