Friday, November 11, 2011

துமிந்த சில்வா வெளிநாடு சென்று சிகிச்சை பெற தடையில்லையாம்

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சந்தேக நபர் அல்ல. எனவே அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதில் தடையெதுவும் இல்லை என சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாரத லக்ஷ்மனின் கொலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சந்தேக நபராக பொலிஸாரால் பெயரிடப்படவில்லை. எனவே அவர் எந்த நாட்டிலும் எந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி பெறத் தேவையில்லை என்றும், சாதாரண நபர் ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்கு எந்த இடத்திலும் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

துமிந்த சில்வா எம்.பி. வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதி பெற்றாரா? என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டிற்குள் குற்றச்செயல்கள் துரிதமாக அதிகரித்துச் செல்வதாக ஜோன் அமரதுங்க சுட்டிக்காட்டினார்.

பொலிஸார் பக்கச் சார்பின்றி செயற்படுவதற்கான அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வழங்கப்படுவதாக கூறப்படினும் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சென்னையில் இருந்து கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டதும், அது குறித்து விசாரணை முன்னெடுத்த பிரதிப் பொலிஸ் அத்தியட்சகரை பொலிஸ் புலனாய்வுப் பிரிவில் இருந்து வேறு பிரிவிற்கு மாற்றியுள்ளதாக ஜோன் அமரதுங்க மேலும் குறிப்பிட்டார். பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படாமை சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யாமல் வெளிநாடு செல்வதற்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளமை, பொலிஸ் துறையின் சுயாதீன தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக பதில் எதிர்கட்சித் தலைவர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாட்டில் தொடர் குற்றச்செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று கூறினார். பாரத லக்ஷ்மன் கொலைச் சம்பவத்தின் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் அதிகாரி கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்படுவதற்கு காரணம், அந்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உரியவாறு சேவைக்கு சமூகமளிக்காமையினால் இடமாற்றம் வழங்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடமே என அமைச்சர் தெரிவித்தார்.
_

No comments:

Post a Comment