ஜாமீன் மனு நிராகரிப்பு சிபிஐ முகத்தில் அறைந்த தீர்ப்பு: பா.ஜனதா
2ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது, சிபிஐ-யின் முகத்தில் அறைந்த தீர்ப்பு ஆகும் என்று பா.ஜனதா கூறியுள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனைக் கூறிய அக்கட்சியின் பேச்சாளர் பல்பீர் பன்ஞ், கனிமொழி வழக்கில் சிபிஐ-யின் நிலை மாற்றம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும்,அதே சமயம் சிபிஐ-யின் வேண்டுகோளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ எதிர்க்கவில்லை என்றபோதிலும், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை வெவ்வேறானவர்களாக காட்ட சிபிஐ முயற்சித்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
கனிமொழி விவகாரத்தில் அவரது ஜாமீன் மனுவை எதிர்ப்பதில்லை என்ற முடிவு செய்த சிபிஐ, மற்றவர்கள் விடயத்தில் மேற்கொண்ட மாறுபாடான நிலை ஏற்புடையதல்ல. துரதிர்ஷடவசமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் கருணாநிதி சந்தித்த பிறகு இது நடந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சி.பி.ஐ. நீதிபதி சைனி, அதற்கான காரணங்களை வெளியிட்டார். அவரது தீர்ப்பு விவரம் வருமாறு:-
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும், அதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் மிகக் கடுமையானவை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை புதைக்கும் வகையில் வீழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் குற்றம் நடந்துள்ளது.
குற்றவாளிகளில் ஒருவரான கனிமொழி சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் உள்ளார். மக்களுக்கான பொது நிதியை அவர் தன் சொந்த நலனுக்காக பயன்படுத்தி இருக்கிறார். இது மாபெரும் குற்றமாகும்.
அவரது ஜாமீன் மனுவில் சட்டப்பிரிவு 437-ன் கீழ் தான் ஒரு பெண் என்பதால் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் பெண் என்ற கற்பனை வாதத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. அவருக்கு ஜாமீன் வழங்க எந்த ஆதாரமும் இல்லை. முகாந்திரம் இல்லாமல் அவரை விடுவிக்க இயலாது. எனவே அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
சி.பி.ஐ. வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதத்தின் போது, முக்கிய குற்றப்பத்திரிகைக்கும், துணை குற்றப்பத்திரிகைக்கும் வித்தியாசம் இருப்பது போல பேசினார். ஆனால் குற்றப்பத்திரிகைகளிடையே எந்த வித்தியாசமும் இல்லை. சட்டத்தின் பார்வையில் எல்லாம் ஒரே குற்றப்பத்திரிகை தான்.
மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், தாங்கள் 5 முதல் 9 மாதங்கள் வரை ஜெயிலில் இருப்பதாக கூறியுள்ளனர். விசாரணை விரைவில் முடியாத சூழ்நிலையில் இருப்பதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று தங்கள் ஜாமீனில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜாமீனில் விடுதலை பெற இது தகுதியான, நல்ல அடிப்படையான காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இது பற்றி நான் மிகவும் கவனமுடன் ஆய்வு செய்து பார்த்தேன். சில குறிப்பிட்ட வழக்குகளில், சூழ்நிலைகள் பொருந்தி வரும் போது, பல மாதமாக சிறையில் உள்ளோம் என்ற காரணம் பொருத்தமாக இருக்கும். ஆனால் சில வழக்குகளுக்கு இந்த வாதம் பொருந்தாது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 409-ன் கீழ் நம்பிக்கைத் துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிக, மிக கடுமையான சட்டப்பிரிவாகும். இந்த பிரிவின் கீழ் அதிக பட்சமாக ஆயுள் தண்டனை கொடுக்க முடியும்.
இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு சாதகமாக எந்த மாற்றமும் செய்ய இயலாது. எனவே அனைவரது ஜாமீன் மனுக்களையும் இந்த கோர்ட்டு நிராகரித்து உத்தரவிடுகிறது.
இவ்வாறு நீதிபதி சைனி கூறினார்.
நீதிபதி சைனியின் இந்த அதிரடி தீர்ப்பை கேட்டதும், சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் கண் கலங்கினார்கள். கரீம் மொரானி குடும்பத்தினர் கதறி அழுதனர். ராசாத்தி அம்மாளும், கனிமொழியும் கண்ணீர் மல்க நின்றது, தி.மு.க.வினரை நெகிழச் செய்தது.
தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டதும் கனிமொழி உள்பட 8 பேரும் மீண்டும் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கனிமொழி மீண்டும் சிறைக்கு புறப்பட்டுச் சென்ற போது நடிகை குஷ்பு மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் அதிர்ச்சியுடன் நின்றனர்.
இந்த வழக்கில் 11-ந் தேதி விசாரணை தொடங்குகிறது. இதில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.
0 comments :
Post a Comment