Friday, November 11, 2011

வங்குரோத்தடைந்த கட்சிகள் அரசின் திட்டங்களை குழப்ப முயற்சிக்குதாம்

அரசாங்கம் மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய தீர்மானங்களை எடுக்கும் போதும் திட்டங்களை மேற்கொள்ளும் போதும் வங்குரோத்தடைந்த கட்சிகள் அதனை குழப்ப முயற்ச்சிக்கின்றன. அவைகள் பௌத்த மதத்தலைவர்களிடம் பொய்களை கூறி அவர்களையும் பிழையாக வழிநடத்த முயற்ச்சிக்கின்றன என்று தென்னை அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்ப்பகுமார குறிப்பிட்டார்.

கட்டானை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான சந்திப்பு நிகழ்வில கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே; அமைச்சர் மேற் சொன்னவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு கட்டானை தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விசேட வைத்திய நிபுணர் சுதர்சணி பெர்னாண்டோ புள்ளே தலைமையில் வெலியேனயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது.

மாகாண சபை உறுப்பினர் லலித் வணிகரத்ன, கம்பஹா மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர், கட்டாணை பிரதேச செயலாளர் உட்பட மேலும் பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தொடர்ந்து உரையாற்றுகையில்,

1994 ஆம் ஆண்டு எமது கட்சி ஆரம்பமானதோடு சமுர்த்தி திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே சமுர்த்தி திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தை ஆரம்பிக்கும் போது பலரும் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தனர். ஆனால் இன்று இத்திட்டம் வெற்றிகரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது .இளம் தலைமுறையினர் தமது திறமைகளை வெளிக்காட்டவும், போதைப்பழக்கம்; போன்றவைகளிலிருந்தும், தீய நடத்தைகளிலிருந்தும் விலகி அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் நிலையை சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

சமுர்த்தி திட்டம் 'திவிநெகும கிராம அபிவிருத்தி திணைக்களம்' என்ற பெயரில் இனிமேல் செயற்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தேச பறிமுதல் சட்ட மூலம் தொடர்பாக இன்று பவ்வேறு வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. செவனகல சீனித்தொழிற்சாலை சீனி உற்பத்தி செய்ய ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆனால் இன்று அது மதுபானம் தயாரிப்பதற்கே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு சீனி தயாரிப்பு குறைவடைந்துள்ளது மாறாக ஸ்பிரிட் தயாரிப்பு அதிகரித்துள்ளது.

செயற்திறன் இல்லாத தொழிற்துறைகள் மற்றும் குறைந்தளவான பயன்பாட்டு சொத்துக்களை செயற்திறன் மிக்கதாக மாற்றும் வகையில் கொண்டு வரப்படவிருக்கும் உத்தேச பறிமுதல் சட்டத்தின் ஊடாக எமது அரசாங்கத்தை சேர்ந்த அரசியல் வாதி ஒருவருடைய நிறுவனமும் பறிமுதல் செய்யப்படவுள்ளது என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோபிள்ளே அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது,

இன்று சமுர்த்தி திட்டத்தினால் நாட்டில் வறுமை நிலையை குறைக்க முடிந்துள்ளது .வறுமை சுட்டிகளின் ஊடாக இவை உறுதிப்படுத்தபட்டுள்ளன .இன்று பெரும்பாலானவர்களிடம் செல்லிடத் தொலைபேசி,மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டிகள் ,வேன்கள் உள்ளன. இது எதனை எடுத்துக்காட்டுகிறது? வங்கியில் சேமிப்பில் உள்ள பணத்தின் மூலமாகவோ கையில் வைத்திருக்க கூடிய பணத்தின் மூலமாகவோ மாத்திரம் வறுமையை அளவிட முடியாது என்றார்.

செய்தியாளர் - எம். இஸட். ஷாஐஹான்

No comments:

Post a Comment