முன்னாள் அமைச்சர் எம்.ஏ. அப்துல் மஜீட் நேற்று செவ்வாய்க்கிழமை தனது 85ஆவது வயதில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் இரவு 9.25 மணிக்கு இறையடி சேர்ந்தார்.இவர் கடந்த 24ஆம் திகதி சுகயீனமுற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
கிழக்கிலங்கையில் மதிப்புக்குரிய கல்விமானாக திகழ்ந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரினால் ஏடு துவக்கப்பட்ட மாணவராக தனது ஆரம்பக் கல்வியை 1933ஆம் ஆண்டு சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலையில் கற்றார். பின்னர் 1934ஆம் ஆண்டு இடைநிலைக் கல்வியை தொடர்வதற்காக மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும், உயர்தரக் கல்வியினை பெற்றுக் கொள்ள 1943 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு சென்ற இவர், 1946ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று 1947ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைகழகத்துக்கு கலைத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு 1950ஆம் ஆண்டு பொருளாதாரப் பட்டதாரியாக பட்டம் பெற்றார்.
இவர் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் பட்டதாரி என்ற முத்திரையினையும் பதித்துள்ளார்.
பின்னர் தான் கற்ற மட்டக்களப்பு சிவானந்த கல்லூரியில் 1951 தொடக்கம் 1952 இறுதிவரை ஆசிரியனாக பணியாற்றிய இவர், 1953ம் ஆண்டு தொடக்கம் 1954ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பிராந்திய சமூக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளார்.
.அதன் பின்னர் தான் வகித்து வந்த சமூகசேவை உத்தியோகத்தர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு 1954ஆம் ஆண்டு நடை பெற்ற பட்டின சபை தேர்தலில் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட முதலாம் வட்டாரத்தில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட அப்துல் மஜீட் அவர்கள் 6 வருடங்களாக பட்டின சபை தலைவராக பணியாற்றினார்.
1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொத்துவில் தொகுதிக்கு சுயற்சை உறுப்பினராக போட்டியிட்டு 7,736 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றார். பின்னர் அதே 1960ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் பொத்துவில் தொகுதிக்கு சுயற்சைக் குழுவில் போட்டியிட்டு 10,654 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார்.
அதனை தொடர்ந்து 1965, 1970, 1977, 1989ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியூடாக போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, அமைச்சராக இருந்து 38 ஆண்டுகள் இப்பிராந்தியத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்காக அளப்பரிய சேவைகளை செய்துள்ள்ளார்.
மர்ஹும் அப்துல் மஜீட் 1977ஆம் ஆண்டு தொடக்கம் 1978ஆம் ஆண்டு வரை காணி, விவசாயப் பிரதியமைச்சராகவும், 1978 தொடக்கம் 1980 வரை மின்சக்தி எரிபொருள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சராகவும், 1980 தொடக்கம் 1981 வரை எரிபொருள் மின்சக்தி பிரதி அமைச்சராகவும், 1981 தொடக்கம் 1983ஆம் ஆண்டுவரை மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும், 1983 தொடக்கம்1989ஆம் ஆண்டுவரை தபால், தந்தி, தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சராகவும், 1989 தொடக்கம் 1992ஆம் ஆண்டு வரை நெசவுக் கைத்தொழில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் தபால்தந்தி அமைச்சர் எம்.எ.அப்துல் மஜீட்டின் ஜனாசா நேற்று செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை நகரசபை அப்துல் மஜீட் மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்துது.
ஜனாசாவிற்கு அருகில் அவராது சகோதரர் அமீர்அலி அமர்ந்திருப்பதையும் மக்கள் அஞ்சலி செலுத்துவதையும், முன்னாள் அமைச்சர் எ.ஆர்.எம்.மன்சூர், கிழக்கு மாகான சபை அமைச்சர் உதுமாலெவ்வை உறுப்பினர் மஜீட் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியபின் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.
படங்கள்- காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
கடைகள். பாடசாலைகள் மூடப்பட்டு மரியாதை
இதேவேளை, திங்களன்று இரவு காலமான சம்மாந்துறைத் தொகுதியின் முடிசூடாமன்னன் முன்னாள் தபால்தந்தி அமைச்சர் எம்.எ.அப்துல் மஜீட்டிற்கு மரியாதை செலுத்துமுகமாக சம்மாந்துறையிலுள்ள கடைகள். பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்தும் நேற்று பூட்டப்பட்டிருந்தன. பாதுகாப்புப் படையினர் பொலிசார் ஒழுங்குகளைக் கவனித்தனர். அவற்றை படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment