Saturday, November 5, 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாடும் முரளிதரனும் சந்திரகாந்தனும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடுளை சாடி மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை புறக்கணித்தே. வந்துள்ளனர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சமுர்த்தி உற்பத்தி மற்றும் விற்பனைக்கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வுகளை கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளதாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் எனபதற்கு நல்ல உதாரணம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமெரிக்க விஜயத்தின் போது கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளாமையாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இங்கேயே உள்ளனர். இவர்களில் ஒருவரையாவது அழைத்துச்சென்றிருக்கலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலம் பேசத்தெரியாதா? பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அண்ணன் தாரளமாக ஆங்கிலம் பேசுவார். அவரையாவது அழைத்துச் சென்றிருக்கலாம்.ஆனால் கிழக்கு என்ற ஒருகாரணத்திற்காக மட்டக்களப்பை இவர்கள் புறக்கணித்துள்ளனர்.

கிழக்கை இவர்கள் புறக்கணிப்பது இன்று மட்டுமல்ல தொடர்ந்து செய்துவரும் நடவடிக்கையாகும். இராஜதுரையை புறக்கணித்தார்கள், புலிகள் நான் கிழக்கு என்பதற்காக என்னை புறக்கணித்தார்கள்.

இவ்வாறு கால காலம் இவர்களின் கிழக்கு புறக்கணிப்பு இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றது.கடந்த 30 வருடகால யுத்தத்தின் போது கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு இவர்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் பிரதியமைச்சர் முரளிதரன் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இல்லாத பொல்லாத பிரச்சினைகளையெல்லாம் மக்கள் மத்தியில் தோற்றுவித்து அதனூடாக அரசியல் இலாபம் ஈட்ட முற்படுகிறார்கள். இதைத்தான் கடந்த காலங்களிலும் இவர்களது வடக்குத் தலைமை செய்து வந்திருக்கின்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தந்தை செல்வா காலத்திலிருந்து இன்றுவரை வாக்குகளைப் பெறுவதற்கு பல யுக்திகளை கையாண்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

. வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இடம் பெற்ற வருடார்ந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது,

தற்போது மிகவும் பூதாகரமான ஓர் பிரச்சினையாக காணி பதிவு பிரச்சினையினை தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இத் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்க்கு நன்கு தெரியும் 1970ம் ஆண்டைப்போல் ஓர் சூழல் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் நிராகரிக்கின்ற காலம். ஆகவே மக்களை திசை திருப்பி அவர்களது வாக்குகளை அபகரிக்க வேண்டும் இதற்காகவே இன்று காணிப்பதிவுப் பிரச்சினை மற்றும் உண்ணாவிரதம், வெளிநாட்டுப் பயணங்கள் என மக்களை அவர்கள் காலா காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையிலே காணிப்பதிவு என்பது செய்யப்பட வேண்டியதொன்றுதான். அதாவது இப் பதிவின் ஊடாக உண்மையான காணி உரிமங்கள் அற்றவர்களுக்கு தரவுகள் பெறப்பட்டு அறவே காணியற்றவர்களுக்கு சமபங்கீடடின் அடிப்படையில் வழங்குவதற்கான ஓர் திட்டமாகும். என்னைப் பொறுத்தவரை இதனை எதிர்ப்பவர்கள் உண்மையிலே சுயநல வாதிகள்தான். அதாவது இதனை பூதாகரமான ஓர் பிரச்சினையாக தூக்கிப் பிடிக்கும் ஆனந்த சங்கரி அவர்களுக்கு பதிவுகள் எதுவுமே இல்லாத பல நூறு ஏக்கர் காணிகள் கிளிநொச்சியிலே இருக்கின்றன. அதற்கான உரிமையாளர்கள் யாருமே இலங்கையில் இல்லை. இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் அந்தக் காணிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு காணிகள் அற்றோர்க்கு அரசு பகிர்ந்தளிக்கும்.

இதே போன்று இரா சம்பந்தனை எடுத்துக் கொண்டால் திருகோணமலையிலே தமிழ் பல்கலைக் கழகம் அமைப்பதற்கென காணி கொள்வனவு செய்யப்பட்டது. அக் காணிக்கு உரிமை கொண்டாடுபவர் சம்பந்தன் அவர்கள்தான். இவ்வாறு தங்களது சுயலாபங்களுக்காக மக்களை தூண்டி விட்டு அதில் குளிர் காய நினைப்பவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இதனைத்தான் காலங்காலமாக இவர்கள் செய்து வருகின்றார்கள்.

கிழக்கு மாகாணம் இன்று பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்டு வருகின்றது. இவ்வளவு காலமும் இவ்வாறான ஓர் நிலை கிழக்கில் இருக்கவில்லை. இதனால் தற்போது உள்ள த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொறுக்க முடியவில்லை. அதனால் இல்லாத பொல்லாத பிரச்சினைகளையெல்லாம் மக்கள் மத்தியில் தோற்றுவித்து அதனூடாக அரசியல் இலாபம் ஈட்ட முற்படுகிறார்கள். இதைத்தான் கடந்த காலங்களிலும் இவர்களது வடக்குத் தலைமை செய்து வந்திருக்கின்றது.

அரசுடன் பதினொரு கட்டப் பேச்சு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் முக்கிய சந்திப்புகள் என காலங்களை நீடித்துக்கொண்டுதான் செல்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களிடத்தில் தெளிவான ஓர் கொள்கை வகுப்பு இல்லை. அவ்வாறு இருக்குமாயின் அதனை அடிப்படையாகக் கொண்டு பேசி அது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்தலாம். ஆனால் இவர்களிடம் எதுவுமே இல்லை. அதனால்தான் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலும், வடக்கிலிருந்துகொண்டு எம்மவர்களை வழி நடாத்துகின்ற கலாச்சாரம் இன்றுடன் முடிவுறுத்தப்பட வேண்டும். இதற்கு எமது மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இவர்களது தலைமைத்துவத்தின் கீழ் இருந்த காலங்களில் எமது கிழக்கு மாகாணம் என்ன முன்னேற்றத்தைத்தான் கண்டிருக்கின்றது? என நாம் சிந்திக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் எதுவுமே இல்லை. மாறாக உயிரிழப்புக்கள், உடைமை இழப்புகள் என எமது மாகாணம் அழிவுற்ற பின்புலங்களைத் தான் கொண்டிருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment