அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி படுகொலை செய்தியை முதலில் வெளியிட்ட நிருபர் மரணம்
அமெரிக்க அதிபர் ஜான் எப்.கென்னடியை சுட்டுக் கொன்ற செய்தியை முதன்முதலில் வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் டாம் விக்கர் காலமானார். அவருக்கு வயது 85. கடந்த 1963ம் ஆண்டு நவ.22ம் தேதி அமெரிக்காவின் டீலே பிளாசா பகுதியில் காரில் சென்ற போது அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருடைய காருக்கு பின் பிரஸ் பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் இருந்தவர் நியூயார்க் டைம்ஸ் நிருபர் டாம் விக்கர். பத்திரிகை வேலைக்கு புதியவர். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் பரபரப்படைந்தார் டாம். அவரிடம் நிருபர்கள் வைத்திருக்கும் நோட்பேட் இல்லை. அதிபரின் நிகழ்ச்சி நிரல் குறித்து அளித்திருந்த அழைப்பிதழின் பின்பக்கமே அனைத்து தகவல்களையும் குறிப்பெடுத்தார்.
உடனடியாக போனிலேயே பத்திரிகை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். சுமார் 2 பக்க அளவுக்கு அவர் கொடுத்த செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்தன. கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் தத்ரூபமாக அவர் விவரித்திருந்தார். நாவல் ஆசிரியராக விரும்பினார் டாம். அவர் எழுதிய நாவல்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், கென்னடி படுகொலை செய்திக்கு பின் அவர் உலகளவில் பிரபலமானார்.
வெர்மான்ட் நகரின் ரோசெஸ்டர் பகுதியில் வசித்து வந்த டாம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு பமீலா என்ற மனைவி இருக்கிறார். வடக்கு கரோலினாவில் ஏழை குடும்பத்தில் பிறந்து உலகளவில் பிரபலமான டாம் விக்கரின் மறைவுக்கு முக்கிய தலைவர்கள் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment