Friday, November 25, 2011

நீர்கொழும்பில் மூன்று இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நகைகள் திருட்டு

வீடொன்றுக்குள் இரவு வேளையில் புகுந்து மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ள சம்பவம் நீர்கொழும்பில் இடம் பெற்றுள்ளது. நீர்கொழும்பு தளுபத்தை பல்லன்சேனை வீதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்று வியாழக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .

தாலி தட்டு –1, வளையல்-1, மோதிரங்கள்-4 , நெக்லஸ்-1, கை சங்கிலி –1 , என்பனவே திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் புதிதாக திருமணம் செய்த கணவன் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். கணவன் காலையில் கொழும்புக்கு தொழிலுக்கு சென்று விட்டு இரவு வேளையில் வீட்டுக்கு திரும்புவார். அதுவரையில் மனைவி அந்த ஒழுங்கையில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டுக்கு சென்று தங்கியிருப்பார். கணவன் இரவு திரும்பி வந்த பிறகு இருவரும் தமது வீட்டுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந் நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் இருவரும் தமது வீட்டுக்கு வந்த போது , இனந் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் பின்பக்கமாக மதில் ஒன்றில் ஏறி தப்பிச் செல்வதை இருவரும் கண்டுள்ளனர்.

இதனை அடுத்து, அவர்கள் வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர். பின்னர் வீட்டின் அறையை சென்று பார்த்த போது, அலுமாரி உடைக்கப்பட்டு அதிலிருந்த மூன்று இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நகைகளும் ஒரு தொகை பணமும் திருடப்பட்டதை கண்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஐஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com