சம்பந்தனுக்கும் பொன்சேகாவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை – விக்கிலீக்ஸ்!
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இரு தரப்புக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பான ஆவணம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாட்டு தூதுவராலயங்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆவணத்தின் பிரதியொன்றை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமக்கு வழங்கியதாக அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த விசேட இரகசிய குறிப்பில் தூதுவர் இந்தத் தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வு, விரிவான அரசியல் சாசனத் திருத்தம் ஆகியன தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் சரத் பொன்சேகா இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதாகவும், இதில் சம்பந்தன் கைச்சாத்திடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பர்கர் ஆகிய சகல இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வு குறித்து இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருந்தது.
தேசிய பாதுகாப்பு, நிதிக் கொள்கை, குடிவரவு குடியகழ்வு போன்ற மிக முக்கியமான விடயங்கள் தவிர்ந்த ஏனைய சகல விடங்கள் தொடர்பிலும் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு இடையில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள இணங்கப்பட்டிருந்ததாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்திருந்தார்.
தேர்தலுக்கு முன்னைய காலத்தில் சம்பந்தனுக்கும் அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் பல தடவை சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன.
இடம்பெயர் மக்களை விடுவிப்பதனை தவிர ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையும் செய்யவில்லை என சம்பந்தன் தெரிவித்ததாக புட்டீனாஸ் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகா வெற்றியீட்டக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பின்னர், சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவை ஆட்சி நடத்தினால் அது தமிழ் மக்களுக்கு பாதிப்பாக அமையும் என சம்பந்தன் தெரிவித்தாக, புட்டீனாஸ் குறிப்பிட்டிருந்தார்.
மனித உரிமை மற்றும் மனிதாபிமான விவகாரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என சம்பந்தன் குறிப்பிட்டிருந்ததாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment