"மகாத்மா காந்தியை கொன்றது ஆர்எஸ்எஸ் அல்ல; இந்து மகாசபா"
மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லபட்டு 63 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரை கொன்றது யார்? என்ற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்று இதுநாள் வரை கூறப்பட்டு வந்த நிலையில்,காந்தியின் படுகொலைக்கு பின்னணியில் இருந்தவர் யார்? என்ற புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது புதிய புத்தகம் ஒன்று!
"நேருவும் படேலும், காந்தியும் படேலும் மற்றும் காந்தியும் நேருவும்" என்ற தலைப்பில் இம்மூவருக்குமிடையேயான கடிதங்களை தொகுத்து, நேஷனல் புக் ட்ரஸ்ட் பதிப்பகம் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் காந்தியின் படுகொலை கோட்சே மற்றும் அவரது கூட்டாளிகளால் அரங்கேற்றப்பட்டதா அல்லது ஆர்எஸ்எஸ் ஆல் நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது அந்த புத்தகம்.
இதில் மகாத்மா காந்தியின் படுகொலையின் பினனணியில் இந்து மகா சபா இருந்ததாகவும், ஆர்எஸ்எஸ் அல்ல என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த படுகொலை அரங்கேறியது.
கொலை நடந்தவுடன், "பாபுவின்(காந்தி) படுகொலை பின்னணியில் இந்து மகா சபாவை சேர்ந்த சில தீவிரவாத குழு உள்ளது" என்ற தகவலை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் முதலில் தெரிவித்தது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல்தான் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு "பேமண்ட்" கொடுக்குமாறு வலியுறுத்தி இந்தியாவை பலவீனப்படுத்தியதற்கு காந்திதான் காரணம் என்று சிலர் கருதியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் ஆர்எஸ்எஸ்-சை தடை செய்ய நேரு எடுத்த முடிவுக்கு ஆதரவாக வல்லபாய் படேல் இருந்ததாகவும், அதே சமயம் ஆர்எஸ்எஸ்-சை விட இந்து மகாசபாதான் மிக ஆபத்தான அமைப்பு என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் அப்புத்தகம் தெரிவிக்கிறது.
அதே சமயம் தமது உள்துறை அமைச்சகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் பிரதமர் நேரு தலையிட்டு வந்ததால் அவர் மீது படேல் மிகவும் கோபத்துடன் இருந்துவந்ததாகவும், இரு தலைவர்களுக்குமிடையேயும் இணக்கமான உறவு இல்லாமல் இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில், உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளில் பிரதமர் தலையிடுவது தமக்கும், தமது அமைச்சகத்திற்கும் அவமானகரமான ஒன்று என நேருவுக்கு ஒருமுறை கோபத்தில் படேல் கடிதம் எழுதியதாகவும் அந்த புத்தகம் மேலும் தெரிவிக்கிறது.
0 comments :
Post a Comment