நேற்றைய தினம் இலங்கையின் தெற்குப் பகுதியில் அதிகளவு சேதத்தை ஏற்படுத்திய கால நிலை தொடர்பாக தாங்கள் இலங்கைக்கு அறிவித்ததாகவும் ,ஆயினும் இலங்கை அதிகாரிகள் இது தொடர்பாக எந்த வித அக்கறையும் செலுத்வில்லை என்று உலக கால நிலை மாறுபடுவது தொடர்பான அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் சூறாவளி நிலைமை தொடர்பாக ஏழு தினங்களுக்கு முன்னர் தாங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும், அவர்கள் அதனை கவனத்தில் எடுக்காததன் பலன் இப்போது கிடைத்துள்ளதாகவும் அந்த நிலையம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் கூட இதுதொடர்பாக எந்தவித எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று (25) பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட நிலை குறித்து முன்கூட்டியே அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடுக்க வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு இயலாது போனமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விசேட குழுவொன்றை அமைத்து அதன் ஊடாக விசாரணை நடத்தவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கால நிலை மாற்றம் தொடர்பாக சரியாக முன்னெச்சரிக்கை விடுக்காமை தொடர்பில் மீனவர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக மீனவர்கள் சிலர் இறந்துள்ளதுடன் இன்னும் சிலர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment