Saturday, November 5, 2011

ஜெ யின் மனுவை நிராகரித்த பெங்களுரு நீதிமன்று மன்றில் ஆஜராக உத்தரவு

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும். இதற்கு நாள் கணக்கெல்லாம் கிடையாது. நீதிமன்றம் அனைத்துக் கேள்விகளையும் கேட்டு முடிக்கும் வரை போயாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது. இதுதொடர்பாக விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவைத் தொடர்ந்து, 66 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அக்.20 மற்றும் 21-ம் தேதிகளில் ஜெயலலிதா நேரில் ஆஜரானார். அவரிடம் மொத்தம் 1350 கேள்விகள் கேட்க நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவும், அரசு சிறப்பு வக்கீலும் திட்டமிட்டிருந்தனர். இதில் 2 நாள் விசாரணையின்போது 567 கேள்விகள் கேட்கப்பட்டன. பாக்கி உள்ள 783 கேள்விகளை கேட்பதற்காக நவம்பர் 8ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை ஜெயலலிதா தாக்கல் செய்தார். அதில் ``நான் கோர்ட்டு உத்தரவுபடி 2 நாட்கள் ஆஜராகி விளக்கம் அளித்து இருக்கிறேன். மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்த கூடாது'' என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை நீதிபதி தல்வீர் பண்டாரி, டி.எஸ்.தாகூர் உள்பட 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வியாழக்கிழமை விசாரித்தது.

விசாரணை ஒத்திவைப்பு

விசாரணையின் போது நீதிபதி டி.எஸ்.தாகூர், இந்த வழக்கின் பெஞ்ச் நீதிபதி பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக அறிவித்தார். தனது விலகலுக்கு எந்த காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து அவருக்கு பதிலாக நீதிபதி தீபக் மிஸ்ரா மூன்று நீதிபகள் குழுவில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 8-ம் தேதி ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அன்று வசதிப்படாவிட்டால் வேறு நாளில் ஆஜராவது குறித்து தெரிவிக்க பெங்களூரு நீதிபதியை அணுகவேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டதாவது:

விசாரணைக்கு நாள் வரம்பு எல்லாம் கிடையாது. மொத்த கேள்விகளையும் கேட்டு முடிக்கும் வரை விசாரணையை தொடரவேண்டும். ஒரேநாளில் விசாரணை முடியாவிட்டால் அடுத்தடுத்த நாள்களில் விசாரணை தொடரவேண்டும். வழக்கின் முக்கியத்துவம் கருதி பெங்களூரு நீதிமன்றம் விசாரணையை விரைந்து முடிக்கவேண்டும். வழக்கு விசாரணைக்காக வரும் ஜெயலலிதாவிற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவேண்டும். என்றும் கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக்மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நவம்பர் 8ம் தேதி ஜெயலலிதா நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும். இருப்பினும் வேறு நாளில் ஆஜராக கோரிக்கை விடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பதால் நிச்சயம் வேறு ஒரு நாளைக்கு ஜெயலலிதா வாய்தா கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment