மனித உரிமைகள் என்றால் என்ன? பொலிஸாருக்கு விசேட கருத்தரங்கு.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் ஒரு சமூக அமைப்பான மனித அபிவிருத்தி ஸ்தாபனம் மலையக மற்றும் கிராமிய பிரதேசங்களில் அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதோடு சமூகக்கட்டமைப்புக்களில் காணப்படுகின்ற சிக்கல்களை விடுவித்துக்கொள்ளவும் பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளவும் ஒரு வழி காட்டியாகவும் தமது செயற்பாடுகளை செயற்படுத்தி வருகின்றது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் திரு விரஞ்சன் டயஸ் சுமனசேகர தெரிவித்தார்.
கலஹா பொலிஸ் அதிகாரிகளும், உத்தியோகத்தர்களுக்கும் மனித அபிவிருத்தி தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் திரு. விரஞ்சன் டயஸ் சுமனசேகர அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
அபிவிருத்தி என்பது திட்டமிடுதலில் மாத்திரம் தங்கியிருக்கும் ஒன்றல்ல. மாறாக அபிவிருத்தியை அடைவதற்கு ஒவ்வொருவரது பங்களிப்பும் ஒத்துழைப்பும் அத்தியவசியமாகும். எனவே அரசதுறையில் பணியாற்றும் நீங்களும் தங்களின் சேவையை மக்களுக்கு முறையாக செய்ய வேண்டும்.
மேலும் அவர் மனித உரிமைகள் என்பதை பற்றிய விளக்கமளிக்கும் போது, மனித உரிமைகள் என்பது மனித பொறுப்புகளுக்கு சமமாகும். பொறுப்புக்கள் அல்லது கடமைகள் பற்றி பேசாது, மனித உரிமைகள் பற்றி பேச முடியாது. நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றே மனித உரிமையும், கடமைகளும் அல்லது பொறுப்புக்களுமாகும். மனித உரிமை என்பது மனிதன் மனிதனாக பிறக்கின்றமையால், இயற்கையாகவே அவனுக்கு கிடைக்கின்ற நியதிகள் என குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான மனித உரிமைகள், மனித வரலாற்றுடன், சமயங்களின் தோற்றத்துடன் தொடர்புபட்டன. மனித வரலாற்றின் போராட்டங்களுடன் மனித உரிமைகளும் வலுப்பெற்று வருகின்றன. என்றாலும், மனித உரிமை அரசியல், சமூக சட்டக் காரணிகளுடன் தொடர்புப்பட்டுள்ளன.
பொலிஸ் துறையில் தமது சேவையை செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சமூகத்தின் முக்கிய பங்காளிகளாவர். அவர்கள் தமது சேவை முறையாக செய்வதற்கு மனித உரிமைகள் என்பது மிக முக்கியமானதொன்றாகும்.
அந்தவகையில் எந்த ஒரு நபரையும் அடிமையாக அல்லாமல் சகோதரர்களாக மதித்தல் வேண்டும், சித்திரவதை மூலமாகவோ அல்லது வேறு எந்த மனிதத்தன்மையற்ற விதத்திலோ யாரையும் நடாத்த முடியாது. ஏனெனில் நாம் மற்றவர்களுடன் அன்பாகவும், மரியாதையாகவும் பழகவேண்டும். அத்தோடு சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள், சாதி, மதம், இனம், மொழி என்பவற்றுக்கு அப்பால் பொலிஸ் துறையில் கடமையாற்றும் நீங்கள் சமமானமுறையிலும் நியாயமானமுறையிலும் மனித கௌரவத்துடனும் உங்கள் சேவையை செய்தல் வேண்டும்.
மேலும் மனித உரிமை, சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை மீறல்கள் தொடர்ந்தும் நம் நாட்டில் இடம்பெற்றுவருகின்றன. எனவே பொலிஸ் துறையில் சேவை செய்து கொண்டிருக்கும் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் மற்றும் பெண்கள், சிறுவர் உரிமைகள் பற்றி தெரிந்திருப்பது சமூகத்தை சீராக வழி நடாத்துவதற்கு உதவியாக இருக்கும். மனித உரிமைகள் பற்றி படிக்கும் ஒவ்வொரு மனிதனும் அவ்வவ்நாட்டின் அடிப்படை சட்டங்களான அடிப்படை உரிமைகள் பற்றியும், அனைத்துலக மனித உரிமை சாசனம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் இது அத்தியாவசியம் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர், பொலிஸ் உத்தியயோகத்தர்கள் தமது கடமையை எவ்வாறு செய்வது என்றும் குறிப்பிட்டார், உதாரணமாக ஒரு முறைப்பாடு எழுதுவது எவ்வாறு, சிறைக்கைதியிடம் எவ்வாறு நடந்து கொள்வது, பெண் குற்றவாளிகளிடம் எவ்வாறு நடந்த கொள்வது, எவ்வாறு பேசுவது போன்ற விடயங்களை உத்தியோகத்தர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
இக்கருத்தரங்கில் கலஹா பொலிஸ் இன்ஸ்பெக்ட்டர் மற்றும் கலஹா பிரதேசத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மனித அபிவிருத்தி தாபன உத்தியோகத்தர்கள், கண்டி மனித உரிமை ஆணைக்குழு உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.
0 comments :
Post a Comment