Wednesday, November 23, 2011

நுவரேலிய மாவட்ட பிரதேச செயலர் , கிராமசேவகர் பிரிவு எல்லைகள் மீள் நிர்ணயம்.

பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பில் மலையகத்தை சேர்ந்த சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், கல்விமான்கள் அனைத்து தரப்பினரும் ஒருமித்த நிலைபாட்டினை வெளிப்படுத்துவது புத்திசாலித்தனமாகும். நுவரெலிய மாவட்டமானது இலங்கையில் அதிகமாக மலையகத் தமிழர்கள் வாழும் ஒரு மாவட்டமாகும். எனினும் இம்மாவட்டத்தில் காணப்படும் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளும் அதிக மக்கள் தொகையினை கொண்டிருப்பதால் இங்கு வாழும் மக்கள் அரச சேவையினை இலகுவாக பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனினும் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகளும் பல வருடங்களாக இம்மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களை மக்கள் அரச சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் சனத்தொகை, நிலபிரதேசம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட வேண்டும் என்பதை வழியுறுத்தி முன்மொழிவுகளை வைத்திருந்தனர். ஆனால் அவை தோழ்வியிலேயே முடிந்தது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் 7000 பேருக்கு ஒரு பிரதேச செயலக பிரிவு காணப்படுகின்றது.

அவ்வாறு இலங்கையில் பல சிறிய பிரதேச செயலக பிரிவுகள் இருக்கின்ற பொழுது நுவரெலிய மாவட்டத்தில் தற்போதுள்ள ஐந்தை பல அளகுகளாக பிரித்து மக்களுக்கு இலகுவாக சேவைகள் சென்றடைய கூடிய வகையில் பிரதேச செயலகங்கள் உருவாக வழிசெய்ய வேண்டும். இந்நிலையினை கவனத்திற்கொண்டு தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு இலகுவாக சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களை பிரிப்பதற்கு நாம் அனைவரும் ஒருமித்த கருத்தினை வலியுறுத்த வேண்டும்.

ஏனெனில் பதுளை மாவட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பொது மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பங்குப்பற்றல் குறைவாக இருந்ததுடன் பங்குபற்றியவர்களிடையே ஒத்த கோரிக்கைகளை கொண்டிருக்கவில்லை. அத்தோடு ஒரு பலமான அழுத்தத்தை பிரயோகிக்க கூடிய அளவிற்கு அனைவரினதும் பங்குபற்றல் சரியாக இருக்கவில்லை. அத்தகையதொரு நிலை நுவரெலிய மாவட்டத்திற்கு ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போது முன்வைக்கப்பட்டுள்ள (12 – 14) பிரதேச செயலகங்களை பெறுவதில் ஒருமித்த கருத்தினை கொண்டிருக்க வேண்டும்.

இலங்கையின் தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார சூழ்நிலைகளை எடுத்து நோக்கி அரசியல் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றமையை உணர்ந்தும் பிரதேச செயலக, கிராம சேவகர் பிரிவு எல்லை ஆகியவற்றை மீள் நிர்ணயம் செய்தல் அல்லது புதிதாக அமைத்தல் சம்பந்தமான நடவடிக்கையை அரசாங்கம் 2010 ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. அத்துடன் அது தொடர்பாக மக்களின், சிவிலமைப்புக்களின் கருத்துக்களை கோரியிருந்தது. எனினும் உள்ளுராட்சி அமைப்பின் எல்லைகளில் மாற்றங்களைக் கொண்டு வருதல் என்பது வெறுமனே புவியியலை மாத்திரம் மையப்படுத்தியதாக கொள்ள முடியாது. சிவில், அரசியல், பொருளாதார, கலாசார உரிமைகளை சார்ந்த சகல விடயங்களையும் தீர்மானிப்பதாக அமைந்திருந்திருக்கின்றது. எனவே தான் குறிப்பாக சிறுபான்மை மக்கள் இவ்விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மலையக மாவட்டங்களைப் பொருத்தவரையில் வடகிழக்கிற்கப்பால் மிக அதிகமான தமிழ் பேசும் மக்களைக் கொண்டதாக காணப்படுவது நுவரெலியா மாவட்டமாகும். ஒப்பீட்டு ரீதியில் நுவரெலியா மாவட்டம் ஏறக்குறைய 755,500 பேர்கள் சனத்தொகையைக் கொண்டிருந்த போதும் அங்கு 5 பிரதேச செயலகங்களே காணப்படுகின்றன. அதேவேளை இங்கு பிரதேசச் செயலகம் ஒன்று சராசரியாக 130,000 மக்களுக்கு சேவையாற்ற வேண்டியுள்ளதோடு, ஒரு கிராம சேவை அலுவலர் சராசரியாக தோட்டப்பகுதியில் ஏறத்தாழ 3500 மக்களுக்கு சேவை செய்ய வேண்டியுள்ளது. இது தேசிய மட்டத்தை விட 5 மடங்கு பெரிதானது. இந்த நிலைமை, பிரதேச செயலகத்தினதும் கிராம சேவை அலுவலரினதும் நிலைமைகளை மட்டுப்பாட்டிற்கு உள்ளாக்குகின்றது. அதேவேளை பயனாளி மக்கள் தங்களுடைய பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் இலக்க வேண்டிய நிலைமைக்கு உள்ளாகின்றனர். எனவே தான் பல சிவிலமைப்புக்கள் பிரதேச செயலகங்களில் மக்களுக்கு நியாயமான சேவைகள் சென்றடைய வேண்டும் என வலியுறுத்துகின்றன.

எனவே தான் சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றால் முன்மொழியப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் கவனத்திற் கொண்டு அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட எல்லை மீள் நிர்ணய குழு கடந்த மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விஜயம் செய்து எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக கலந்துiராடல்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடதக்க விடயம். அதன்படி செப்டெம்பர் மாதம், 2011 பதுளை மாவட்டத்திற்கான கலந்துரையாடல் பதுளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பங்குபற்றல் மிக குறைவாக இருந்தது. அத்தோடு இதில் பங்குபற்றிய ஒரு சில அமைப்புக்கள், அரசியல் கட்சிகளிடம் ஒத்த நிலைபாடும் காணப்பட்டிருக்கவில்லை. அதன்விளைவுளு பதுளை மாவட்டத்தில் மேலதிகமாக எத்தகைய பிரதேச செயலகங்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல்போனது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்கனவே காணப்படுகின்ற 5 பிரதேச செயலகங்களுடன் புதிதாக அட்டன், நோர்வூட், தலவாக்கலை, நானுஓயா, ராகலை, பூண்டுலோயா, மதுரட்ட போன்ற புதிய 7 பிரதேச செயலகங்கள் பிரேரிக்கப்பட்டு தற்போது புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பிரதேசசெயலகங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.



மனித அபிவிருத்தி தாபனம் ஏற்பாடு செய்த ஒன்றுகூடலின் விளைவாக நுவரெலிய மாவட்டத்தில் தற்போது இருந்த 5 பிரதேச செயலகங்களை 13க அதிகரிக்க முடிந்தள்ளது. அதாவது மனித அபிவிருத்தி தாபனம் கலந்தரையாடலில் கலந்தக்கொண்ட அனைத்து சிவில் சமூக அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்ற கலந்தரையாடலில் பங்குபற்றியது. அத்தோடு அனைத்த தரப்பினரம் ஒத்த நிலைபாட்டை முன்வைத்ததோடு பெரும்பான்மை சமூகத்திற்கு பாரிய அழுத்தத்தினை கொடுத்திருந்தனர். இதில் மனித அபிவிருத்தி தாபனமும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மனித அபிவிருத்தி தாபனம் சமூகத்தில் பிரச்சினைகள் ஏற்படும் பொழுது அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளது. அதனூடாக வெற்றியும் கண்டுள்ளது. எனவே இத்தோடு இது நின்றுவிடாது தொடர்ந்து பிரச்சினைகளை வென்றெடுப்பதற்கு தமது ஆதரவு பிரசாரத்தினை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment