கர்ப்பிணியை கற்பழித்த தமிழகப் பொலிஸார் மிருகங்களா? வைகோ ஆவேசம்
விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியினப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறையினரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, மிருகங்கள் கூடச் செய்யத் துணியாத கொடுமையை தமிழகப் பொலிஸார் செய்து உள்ளனர் என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 22 ஆம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள மண்டபம் கிராமத்தில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த லட்சுமி, கார்த்திகா, ராதிகா மாதேஸ்வரி ஆகிய நான்கு பெண்களை, காவல்துறையினர் விசாரணைக்கு என்று கூறி, வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நெஞ்சை உறைய வைக்கிறது.
வள்ளி என்கின்ற அம்மையார் காவல்துறையினரிடம் அந்தப் பெண்களை விட்டுவிடுமாறு கோரி மன்றாடியபோதும், அவர் கண் முன்னாலேயே அவரது மகளையும் மருமகளையும் காவல் துறையினர் பாலியல் வன்முறை செய்து உள்ளனர்.
அதில் லட்சுமி என்ற பெண், மூன்று மாத கர்ப்பிணி ஆவார். அதனைக் கூறி காலில் விழுந்து மன்றாடியபோதும், மிருகங்கள் கூடச் செய்யத் துணியாத கொடுமையை காவல்துறையினர் செய்து உள்ளனர். 19 ஆண்டுகளுக்கு முன்பு 1991 இல் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் பழங்குடிப் பெண்களை அன்று அ.தி.மு.க. ஆட்சியின்போது காவல்துறையினரும், வனத்துறையினரும் பலாத்காரம் செய்தனர். அந்தக் கொடியவர்களுக்கு, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றம் தண்டனை விதித்து உள்ளது.
அதற்குப் பிறகு இப்பொழுது மீண்டும், அதே போன்ற ஒரு கொடூரத்தை, ஈவு இரக்கம் இன்றித் தமிழகக் காவல்துறையினர் நடத்தி உள்ளனர். இது தமிழ்நாட்டின் காவல்துறைக்கு ஏற்பட்டு உள்ள அகற்ற முடியாத கரையும் களங்கமும் ஆகும். இந்த காட்டுமிராண்டிச் செயலில் ஈடுபட்டோருக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். கண்துடைப்புக்காக காவல்துறையினர் மீது வெறும் வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பரமக்குடியில் 7 தலித் இளைஞர்களை அக்கிரமமாகச் சுட்டுக்கொன்ற காவல்துறையினரைப் பணி நீக்கம் செய்யாததால்தான், எந்த அக்கிரமத்தையும் நடத்தலாம் என்கின்ற திமிரோடு இந்தக் கொடுமையை மண்டபம் கிராமத்தில் நடத்தி உள்ளனர். இக்குற்றத்தைச் செய்த காவல்துறையினரை, உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, தமிழக அரசை வலியுறுத்துகின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.
இதேநேரம் பெண்களை கற்பழித்த காவலர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் நடந்த திருட்டு சம்பந்தமாக சென்ற வாரம் தாலுகா காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் மண்டபம் கிராமத்தில் வசிக்கின்ற காசி என்பவரை கைது செய்தது ஒரு லாட்ஜில் வைத்து விசாரணை செய்தார்கள்.
இந்த வழக்கில் அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களை கைது செய்ய திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் அந்த வீட்டுக்குச் சென்று, அந்த வீட்டில் உள்ள குடும்பப் பெண்களான ராதிகா, லட்சுமி, வைகேஸ்வரி, கார்த்திகா ஆகியோரை கைது செய்து மாலை 7 மணி அளவில் வேனில் ஏற்றினர்.
22ஆம் தேதி இரவு முழுவதும் தைல மரக்காட்டில் வைத்து இந்தப் பெண்கள் நான்கு காவலர்களால் கற்பழிப்புக்கு ஆளாக்கியுள்ளதாக அந்தப் பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்களை இரவில் கைது செய்யக் கூடாது என்று தெரிந்தும் அவர்களை இரவில் கைது செய்தது ஏன்?
பெண் காவலர்களை உடன் அழைத்துச் செல்ல வில்லை? சம்பந்தப்பட்ட காவலர்களை பதவி நீக்கம் செய்து, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 comments :
Well done,please tidy up your land
and be an excellent example for others.There are lots of things to
wipe out which are severe threat to the society.
Post a Comment