Friday, November 11, 2011

போதைப் பொருள் பாவனை: யாழ்ப்பாணத்தில் நான்கு மாணவர்கள் கைது

ஹெரோயின் போதைப் பொருளைப் பயன்படுத்தி பாடசாலை நண்பர்களுக்கு அவற்றை விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக யாழ். போதைப் பொருள் தடுப்பு பொலிஸார் மற்றும் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த வலைப் பின்னலை மடக்குவதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வலைப் பின்னலைச் சேர்ந்த ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவன் ஒருவன் போதைப் பொருள் பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் விரைந்து எடுத்த நடவடிக்கையில் பல மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்து, மாணவர்களுக்கு ஹெரோயின், கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களை விநியோகித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

முதலில் சிக்கிய மாணவனை விசாரணை வளையத்துக்குள் இறுக்கியதன் மூலம் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்ட அவனது நண்பர்களின் விவரத்தைப் பொலிஸார் பெற்றுக் கொண்டனர்.

அவர்களும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். தொடர்ந்தும் பாடசாலை மாணவர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment