உலக மீனவர் தினத்தையிட்டு நீர்கொழும்பு நகரில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது.
நேற்று திங்கட்கிழமை கொண்டாடப்பட்ட சர்வதேச மீனவர் தினத்தையிட்டு மீனவர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனயீர்ப்பை ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளார்கள் தெரிவித்தனர்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் ஹெட்டன் அபெட்கோ அமைப்பு உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்திருந்த மீனவ அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை சேர்ந்த உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு ருக்மணி தேவி ஞாபகார்த்த மண்டபம் அருகிலிருந்து ஆரம்பமான பேரணி பிரதான வீதி வழியாக வந்து, நீர்கொழும்பு பிரதான பஸ்நிலையம் அருகில் நிறைவடைந்தது.
பேரணியாக வந்தவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக எதிர்ப்பு கோசங்களை எழுப்பியதுடன், மக்களை ஒழிக்கும் அபிவிருத்தி யாருக்கு தேவை? ,மீனவர்கள் எப்போதும் படுகுழியில் ,எரிபொருள் விலை வானுயர மீன்கள் மட்டும் கொள்ளை விலையில், நாட்டின் அபிவிருத்தி யாருக்காக? ,பறிக்காதே பறிக்காதே மீனவ நிலத்தை பறிக்காதே,குடியேற்று குடியேற்று விரைவாய் குடியேயற்று ,வடக்கு கிழக்கு மீனவனை விரைவாய் குடியேற்று ,நிற்பாட்டு நிற்பாட்டு இந்திய றோலரை வெகு விரைவாய் நிற்பாட்டு, எமது கடலை எமக்கு கொடு , விடு, விடு எழுத விடு ஊடகவியலாளரை எழுதவிடு என்பன போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.
பேரணியின் நிறைவில் மீழனவ சங்கங்களின் முக்கியஸ்தர்கள் அங்கு உரையாற்றினர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஐஹான்
No comments:
Post a Comment