இஸ்ரேல் ஏவுகணை சோதனையால் ஈரான் அச்சம்
இஸ்ரேல் நேற்று ஜெரிசோ என்ற ஏவுகணையை செலுத்தி சோதனை நடத்தியது. அது அணு ஆயுதங்களை சுமந்து சென்று நீண்டதூரம் விண்ணில் பாய்ந்து தாக்கக்கூடியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
ஈரான் அணு உலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதங்களை தயாரிக்கதான் ஈரான் அணு உலைகளை உருவாக்குவதாக கூறுகின்றனர். ஆனால், இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்களின் மின்சார தேவைக்குதான் அணு உலைகள் பயன்படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் நீண்டதூரம் பாய்ந்து தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது ஈரானை அச்சம் அடைய செய்துள்ளது. ஏனெனில் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இந்த ஏவுகணை மூலம் தங்களது அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்கக்கூடும் என கருதுகிறது. எனவே தாக்குதல் நடத்தினால் அதை சமாளிக்க ஈரான் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தயார் நிலையில் ராணுவம் உள்ளது.
இதுகுறித்து ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் ஹசன் பிரோஷாபடி கூறும்போது, இஸ்ரேலின் எந்த மிரட்டலையும் சந்திக்க தயாராக உள்ளோம். அதற்கான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன. அவர்கள் தாக்கினால் பதிலுக்கு நாங்களும் தாக்குவோம் என்றார்.
0 comments :
Post a Comment