Thursday, November 24, 2011

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில்

கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிய வருகிறது. ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அதில் அடங்கியுள்ள விடயங்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்டறிவதற்கு கடந்த ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது.

முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் உத்தியோகபூர்வ காலம் கடந்த 15 ஆம் திகதி நிறைவடைந்தது. இதேநேரம், ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியினால் ஆராயப்பட்டதன் பின்னர், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஊடாக சர்வதேச சமூகத்திற்கு சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சார்பான அரசுகள் மற்றும் எதிராக செயற்படும் புலம்பெயர் தமிழர்கள் போன்ற சிலர் இது தொடர்பாக அவதானத்துடன் செயற்படுகின்றனர். இதனடிப்படையில் குறித்த அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும், வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

400 பக்கங்கள் அடங்கிய கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை தயாரிக்க, 57 அமர்வுகள் கூட்டப்பட்டன. வடக்கு கிழக்கு உட்பட சகல பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் சகல துறைகளையும் சேர்ந்தவர்களின் எழுத்துமூல மற்றும் வாய்மூல சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன. 6 ஆயிரத்து 100 சாட்சியங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com