Friday, November 25, 2011

சீரற்ற கால நிலையால் நாட்டின் பல இடங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீரற்ற கால நிலையால் நாட்டின் பல இடங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தெற்கு பகுதியின் சில இடங்களில் மினி சூறாவளி வீசியுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரம் வருமாறு,.

காலி மாவட்டத்தில் இன்று வீசிய மினி சூறாவளியால் சுமார் 100 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாக காலி மாவட்ட மேலதிக செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்களினால் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும், காலி மாவட்ட செயலகம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் ஏற்பட்ட மினி சூறாவளியால் சேதமடைந்த வீடுகள் குறித்து கணிப்பிட்டு வருவதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் ஈ.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மினி சூறாவளியால் வீதியில் முறிந்து வீழ்ந்த மரங்களை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், மாத்தறை மாவட்டத்தில் மினி சூறாவளியால் பாடசாலை கட்டடங்கள் பலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனுராதபுரத்தில் பெய்துவரும் கடும் மழையை அடுத்து நாச்சதூவ வாவியின் நான்கு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மல்வத்து ஓயாவை பயன்படுத்தும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் வசந்த பண்டார பளுகஸ்வெவ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை. யான் ஓயாவும் சிறு அளவில் பெருக்கெடுக்க ஆரம்பிகத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதியில் வாழும் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழைக் காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 239.3 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர அதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வாவியை அண்டிய பிரதேசங்களில் நீர்த்தேங்கி காணப்படுதால் பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் தொழிலுக்காக செல்வோரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் திருகோணமலை மாவட்டத்தில் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா, மூதூர், முள்ளிப்பொத்தானை, திருமலைநகர் போன்ற பகுதிகளில் உள்ள தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று காலை காற்றுடன் பெய்த கடும் மழை காரணமாக வீதிகளும் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை வடபகுதியில் மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகர், பேசாலை, தலைமன்னார் போன்ற பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளன.

No comments:

Post a Comment