Wednesday, November 2, 2011

துமிந்த சில்வா மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கி பயணம்

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை அழைத்துச் செல்லும் பொருட்டு உறவினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நேற்றிரவு 8.30 அளவில் அவரை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சுசிந்ர கமகே தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் செல்லக்கூடிய அளவிற்கு துமிந்த சில்வா உடல்நிலை தேறியிருந்ததாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கி பயணமானதாக தெரிவிக்கப்படுகிறது. துமிந்த சில்வாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்தியர் மஹேசி விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு துமிந்த சில்வாவின் உறவினர்கள் அவரை வைத்தியசாலையிலிருந்து அழைத்துச் சென்றதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துமிந்த சில்வாவை ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தும் அங்கு அவரை அழைத்துச் செல்வதற்கான பயண நேரம் அதிகம் என்பதனால் அது அவரது உடல்நிலைக்குப் பொருத்தமற்றதாக அமைந்துவிடும் என்ற காரணத்தினாலேயே அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரிலுள்ள பிரபல வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு விசேட சிகிச்சைகளை வழங்கும் பொருட்டு அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரபல வைத்திய நிபுணர்கள் சிங்கப்பூருக்கு வரவழைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment