Wednesday, November 23, 2011

ஒருகொடவத்தையில் கடத்தப்பட்ட வர்த்தகர் நீர்கொழும்பில் விடுவிப்பு

ஒருகொடவத்த பகுதியில் நேற்றைய தினம் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் நீர்கொழும்பு பகுதியில் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார்.லலித் குமார என்ற வர்த்தகரே இவ்வாறு விடுவிக்கப்பட்டவராவார்.இவர் நேற்றிரவு 11.30 அளவில் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாயக்கிழமை அதிகாலை 5.45 அளவில் இனந்தெரியாத நால்வரால் இந்த வர்த்தகர் ஒரு கொடவத்த பகுதியில் கடத்தப்பட்டுள்ளதாக கிராண்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடத்தப்பட்ட வர்த்தகரான லலித் குமார ஊடகவியலாளர்களுக்கு இன்று இது பற்றி தெரிவிக்கையில்,

இளைஞர்கள் சிலர் என்னை வாகனமொன்றில் கடத்தினர்.அந்த வாகனம் நீர்கொழும்பு திசையை நோக்கிச் சென்றது.இதன்போது அவர்கள் எனது கண்களை கட்டியதுடன், தாக்கவும் செய்தனர். இரவு வரை என்னை தடுத்து வைத்து விட்டு, நீர்கொழும்பு பகுதியில் கைவிட்டுச் சென்றனர். பின்னர் அங்கிருந்து பஸ்ஸொன்றில் கொழும்பு புறக்கோட்டைக்கு வந்தேன்.அங்கிருந்து வீடு சென்றடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடத்தப்பட்ட லலித் குமாரவிடம் கிரேண்ட்பாஸ் பொலிஸார் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இந்த வர்த்தகர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று தெமட்டகொட முச்சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment